பெண் டாக்டரை திருமணம் செய்த சர்வேயர், ஆடி மாதத்தில் தனது மனைவியை அனுப்ப மறுத்து அடம் பிடித்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆடி மாசம் பிறந்து விட்டால், புதுமணத் தம்பதியர் சேரக்கூடாது என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக உள்ள மரபாக இருந்து வருகிறது.

அதன் படி, ஆடி மாத்தில் மட்டும் திருமணம் உள்ளிட்ட எந்த நல்ல காரியங்களையும் செய்வதில்லை. சாந்திமுகூர்த்தம் குறிப்பதில்லை, புதுமணத் தம்பதிகளை சேர விடுவதில்லை என்று பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடி மாதம் பிறந்தது. இதனால், புதுமணத் தம்பதியர்களை அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் இந்த ஒரு மாத்திற்குப் பிரித்து வைத்து வருகிறார்கள்.

அதன் படி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திலீபன், திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வந்தார். 

சமீபத்தில், சர்வேயராக பணியாற்றி வந்த திலீபன், அதே பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற இளம் பெண் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்து நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

அதே நேரத்தில், திவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு ஜோலார்பேட்டை அடுத்து உள்ள புள்ளானேரி பகுதியில் மினி கிளினிக்கில் தற்காலிக மருத்துவராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 15ம் தேதி அன்று, ஆடி மாதத்தையொட்டி திவ்யாவின் பெற்றோர், தங்களது மகளை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான, கணவன் திலீபன், தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, கடந்த 18 ஆம்தேதி தீலீபனின் பெற்றோர், மருமகள் திவ்யாவின் வீட்டிற்குச் சென்று, தனது வீட்டிற்கு திவ்யாவை அழைத்து உள்ளனர். ஆனால், தற்போது ஆடி மாதம் நடப்பதால், ஆடி மாதம் முடிந்த பிறகு அழைத்துச்செல்லும் படி திவ்யாவின் பெற்றோர் அவர்களிடம் கூறியுள்ளனர்.

அப்போது, இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்னும் மன உளைச்சலுக்கு ஆளான திலீபன், தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மாடி ரூமிற்கு சென்ற திலீபன், நீண்ட நேரமாகியும் திரும்பி வராத காரணத்தால், அவரது பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்து உள்ளனர். அப்போது, திலீபன் அங்கே தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, கதறி அழுத அவர்கள், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார், திலீபனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், திலீபனின் தாயார் தமிழ் தேவி அளித்த புகாரின் பேரில், திலீபனின் மனைவி திவ்யா, திவ்யாவின் தந்தை, சகோதரர், தாய் மாமா, சித்தப்பா ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, காதல் திருமணமான 7 மாதத்தில், ஆடி மாத்திற்காக மனைவியைப் பிரிந்த கணவன், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.