கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற கலவர வழக்கில், ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் நாடெங்கும் புரட்சித் தீ பற்றி எரிந்தது. தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது, தலைநகர் டெல்லியில் போராட்டத் தீ பற்றி எரிந்தது. ஆனால், போராட்ட தீயை அணைக்க வேண்டிய அரசோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, புரட்சித் தீயை மேலும் பரப்பப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.

அதே நேரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசினார். அத்துடன், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காவலர் ரத்தன்லால் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் வரிசையாக உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் 105 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டத்திலும், அதனால் ஏற்பட்ட வன்முறையிலும் ஒட்டு மொத்தமாக 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 97 பேருக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் மாணவர் அமைப்புகளின் தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா ஜார்கர் உள்ளிட்டோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் 7 மாதங்களுக்குப் பிறகு ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், ஊபா சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முன்னதாக உமர் காலித்திடம் 11 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் கைது செய்யபடக் கூடும் என்றும் தகவல்கள் கூறகின்றன. இதனால், அமைதியாக இருந்த குடியுரிமை திருத்த சட்டப் பிரச்சனை, தற்போது மக்கள் மனதில் மீண்டும் நினைவு படுத்தியது போல் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெல்லி கலவர வழக்கில் சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயரும் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக, அவருக்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.