மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயிரோடு இருந்த காலம் வரை, அவர் தங்கியிருந்த இல்லமான போயஸ் கார்டனின் வேதா இல்லம், தமிழகத்தின் அதிகார மையமாக இருந்து வந்தது. ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ் அதிகாரிகள் தொடங்கி, பிற மாநில முதல்வர்கள் - நட்பு ரீதியாக வருகை தரும் தேசிய கட்சிக்காரர்கள் என அனைவருமே ஜெ முதல்வராக இருந்தபோது, தமிழகத்துக்கு வந்தால் போயஸ் கார்டன் செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

10 கிரவுண்ட் நிலப்பரப்பில், 11 அடி மரக்கதவுகள் பொருந்திய அந்த இரண்டு அடுக்கு வீடு, பிரம்மாண்டத்துக்கான இருப்பிடம். 38 AC, 11 டி.வி, பத்து ஃப்ரிட்ஜ், 29 மொபைல் என இருந்தது வேதா நிலையம்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் வாழ்ந்த இல்லமான வேதா இல்லம், அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவில்லமாக்க, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையாக 68 கோடி ரூபாயை சென்னை குடிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று காலை வேதா நிலையத்தில் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அந்த அரசிதழில் ஒருபகுதியாக, ஜெயலலிதாவின் வீட்டிலிருந்த நகர்த்தும் பொருள்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், ஜெ.வின் அந்த இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ சில்வர், 556 மேஜை - நாற்காலிகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் 8300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் பல பொருள்கள் குறித்த முழு விவரங்கள், அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பே சொன்னது போல, வேதா நிலையம் பிரம்மாண்டமானது தான். உள்ளே நுழைந்ததும், நீண்ட ஹால் - அதன் அருகே ஒரு சிறு மீட்டிங் ஹால் - பக்கத்திலேயே வரவேற்பு அறை இருக்கும். இதேபோல சிறு மீட்டிங் ஹால் - மீட்டிங் வருபவர்கள் தங்கும் அறையென்பது, மாடிப்படிக்கட்டுக்கு அருகிலேவும் மற்றொன்று இருக்கும். இறை நம்பிக்கை கொண்டவர் ஜெ. என்பதால், அவர் வீட்டில் கிழக்கு திசையில் பூஜை அறை இருக்கும்!

மாடி ஏறியவுடன் நூலகம்! ஏறத்தாழ 13,000 புத்தகங்கள் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் அரசிதழில் கூறப்பட்டிருப்பவை 8300 - சொச்சம் புத்தகங்கள்தான்! நூலகத்துக்கு அருகே, மற்றொரு மீட்டிங் ஹால்! இதற்கு அருகில்தான் ஜெ. தங்கியிருந்த அறை. பக்கத்திலேயே சசிகலா இருந்த அறை.

இதோடு முடியவில்லை ஜெ.வின் வேதா இல்லம். இவைபோக இல்லத்தின் உள்ளேயே இரண்டு மாடிக் கட்டடம் கொண்டு, கார் பார்க்கிங் வசதியோடு ஒரு இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் முதல் தளத்தில் ஜெ.வின் கட்சிப்பணிகள், நேர்முக உதவியாளர்களின் அலுவலகங்கள் இருக்குமாம். இரண்டாவது தளத்தில் முதல்வருக்கான முகாம் அலுவலகம் இருக்குமாம்!

வேதா நிலையத்தின் கதவுக்கும் - வீட்டின் வாசலுக்கும் மட்டுமே ஏறத்தாழ 50 மீட்டர் தூர இருக்கும் என சொல்லப்படுகிறது. இத்தனை பிரம்மாண்டமான, பரபரப்புக்கு பஞ்சமில்லாத அந்த இல்லம், இன்று சத்தமின்றி - மௌனமாய் உறங்குகிறது... ஜெ.வை போல!