“ 'சார்பட்டா பரம்பரை' படத்தில், எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர்கள் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள “சார்பட்டா பரம்பரை” திரைப்படம், சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி, சினமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை, பா.ரஞ்சித் இயக்கி இருந்தார்.

வட சென்னை மக்களிடையே கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டும், குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்தும், இந்த திரைப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் காட்சிப்படுத்தி இருந்தார்.

அதே போல், தமிழ்நாட்டில் எமர்ஜென்சி காலத்தில் அப்போது நிலவிய அரசியல் சூழலையும் இயக்குநர் பா.ரஞ்சித், தனது படத்தில் வெளிப்படையாக காட்சிப்படுத்தி இருந்தார். 

“சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள எமர்ஜென்சி கால காட்சிகளானது, ஒரு தரப்பினரிடையே தற்போது பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும்,  சிலர் இதனை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். 

அத்துடன், சமகால அரசியல் நிகழ்வுகளான “அவசரநிலை பிரகடன காலத்தின் போது ஆட்சியில் இருந்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு, மிசாவில் ஸ்டாலின் கைது, எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவது போன்ற” பல அரசியல் நிகழ்வுகள் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இவற்றுடன், “அப்போதைய எம்.ஜி.ஆர் ஆட்சியில் சாராயம் விற்பவர்கள் கட்சியில் இணைவது போன்ற காட்சியும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. 

இதனால், இது தொடர்பாக இணையத்தில் பெரும் விவாதமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “சார்பட்டா பரம்பரை” படத்துக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், “ 'சார்பட்டா பரம்பரை' படத்தில் எம்.ஜி.ஆர்.க்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திமுக வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், “குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். தான் என்றும், கடந்த 1980 ஆம் ஆண்டு 'தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான' நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை எம்.ஜி.ஆர். சென்னைக்கு அழைத்து வந்தார்” என்றும், ஜெயக்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

“ 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்.ஜி.ஆர். அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன” என்றும், ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

“எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை, 'சார்பட்டா பரம்பரை' படத்தில், தவறாகச் சித்திரித்து உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” என்றும், இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றும், ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதனிடையே, சற்று முன்னதாக “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்து, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிவீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.