ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

jaavath puyal

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்பகுதியை வரும் 4ம் தேதி நெருங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு, 'ஜாவத்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதிஅரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் அடுத்த இந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது. ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம்.

தமிழகத்துக்கான கன மழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக தொடர் மழையால் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. நான்கு வாரங்களாக மழை வெள்ளத்தால் அவதிக்கு ஆளான மக்கள், இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உருவாகியுள்ளது. 

அதனைத்தொடர்ந்து தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தது. இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக அது மாறியது. நாளை அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் சின்னம் நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் இந்த புயல் சின்னம் புயலாக மாற உள்ளது. அப்போது அதன் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 3-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு புயல் வடக்கு திசை நோக்கி மேலும் நகரும். அதன் பிறகு அது வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதியை நெருங்கும். அப்போது ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4-ம் தேதி ஜாவத் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் அது நகரும் திசையை பொறுத்து வடக்கு ஆந்திரா,தெற்கு ஒடிசா இடையே எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது தெரியவரும்.

இந்நிலையில் இதற்கிடையே அரபி கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மகாராஷ்டிரா- கோவா இடையே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து குஜராத் கடலோரத்தை
சென்றடையும். இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக மகாராஷ்டிராவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.