திருச்சி பெரிய சூரியூரில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் 400 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. இதற்காக வாடிவாசல் மற்றும் பார்வையாளர்களுக்கான கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக ஜல்லிக்கட்டுக்கு கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இதனால் இந்த ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 400 மாடுகள் பங்கு பெறவும், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 காளைகள், 300 வீரர்கள் களம் காணுகின்றன. அதனைத்தொடர்ந்து இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பார்வையாளர்கள் நிகழ்ச்சியினை தொலைக்காட்சி அல்லது இணையதளம் வழியாக பார்க்க அறிவுறுத்தப்பட்டுவுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் முட்டி காயமடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைப்பதற்கும், தீயணைப்பு வண்டிகள் ஆயத்தமாக இருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.