“சசிலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்று, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, “சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது, அவர்களுக்குள் மீண்டும் தர்ம யுத்தம் தொடங்விட்டதை காட்டுவதாக அமைந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலா அதிமுகவில் இல்லாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் தனி கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டனர். இதனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதன் காரணமகா, கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக வெற்றிப் பெற்று, ஆட்சியை பிடித்தது.

இந்த சூழலில் தான், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணையும் முயற்சியாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தனது பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு, அதன் படி செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “அதிமுக அரசின் நல திட்டங்களை திமுக முடக்கினால் மக்களை திரட்டி போராடுவோம்” என்று, குறிப்பிட்டார்.

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

குறிப்பாக, “சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்றும், அவர் கூறினார். 

அத்துடன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே  அதிமுக செயல்பட்டு வருகிறது” என்று, குறிப்பிட்டார்.

குறிப்பாக, “அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்”  என்றும், ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

 “அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை” என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மாறுபட்ட இந்த கருத்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறினார் என்றும், சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்து தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்” என்றும் சுட்டிகாட்டினார். 

“ ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்து விட்டு நான் விளக்கம் அளிக்கிறேன் என்றும், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

“அதில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம் என்றும், அதிமுகவில் சசிகலாவை சேர்க்க கூடாது எனக் கூறியவர் ஓ.பி.எஸ். தான் என்றும், அவர் மேலும் கூறினார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில், ஓ.பன்னீர் செல்வத்திற்காக பதிலாகவே பார்க்கப்படுவதால், இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.