அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 12 மணிநேரம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதனை நடத்தி வந்தனர். 

சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த இந்த சோதனையானது, தற்போது நிறைவடைந்து உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியல் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் எஸ்.பி. வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகினது. 

அத்துடன், இந்த புகார் குறித்து, எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

மேலும், எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதான புகார்கள் குறித்து சிறப்பு புலனாய்வு போலீஸ் பிரிவு எஸ்.பி., கங்காதரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை நடத்தி வந்தனர்.

குறிப்பாக, ஊழல் தடுப்புச்சட்டம், கூட்டுச் சதி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்பட 6 பேர் மீதும், அவர்களுடன் தொடர்புடைய 11 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால், சட்டசபை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தாமோதரன் எம்எல்ஏ உள்ளிட்ட 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் வேலுமணியின் வீட்டிற்கு வந்த நிலையில், அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கு குவிந்தனர். 

ஆனால் போலீசார் யாரையும்  வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக, மகளரணியினர் உட்பட அதிமுக தொண்டர்கள் வேலுமணியின் வீட்டின் கேட் முன்பாக அமர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கைக்கு எதிராகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

இந்த நிலையில், வேலுமணி வீட்டில் 12 மணிநேரம் நடைபெற்ற வந்த சோதனை மாலை ஆறு மணி அளவில் நிறைவடைந்தது. இதனை அடுத்து வீட்டில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், லாக்கர் சாவி மட்டும் கைப்பற்றப்பட்டதாக சான்றிதழ் அளித்து விட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியேற்றினர். 

அப்போது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் போலீசாருக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர் .பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வேனில் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால், எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலிருந்து 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இவற்றுடன், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத்தொகை ஆவணமும், மாநகராட்சி தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பல நிறுவனங்களுக்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பான ஆவணங்கள், நில பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இப்படியான இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியல் தான், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, சந்தித்து பேசி உள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் நீடித்து உள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது அரசியலில் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தித்து பேசி உள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது ஆக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது, அதிமுகவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.