இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 2 வது டி 20 போட்டியில், கேப்டன் ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் என்று தகவல்கள்
வெளியாகி உள்ளன. இதனால், இன்றைய போட்டியில் யார் கேப்டன்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்றுள்ள நிலையில், 3
போட்டிகள் கொண்ட டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. 

இந்த சூழலில் இவ்விரு அணிகள் இடையிலான 2 வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற இருந்தது.

ஆனால், இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல் ரவுண்டருமான குருணால் பாண்ட்யாவுக்கு திடீரென நேற்று முன் தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால், நேற்று நடக்க இருந்த இலங்கைக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நேற்றைய தினம் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், குருணால் பாண்டியாவுக்கு கொரோனா பாசிட்டிவ்வை வந்ததை அடுத்து, அவர் வேறு ஓட்டலுக்கு மாற்றப்பட்டார். அவருடன் நெருக்கமாக இருந்த 8
வீரர்களுக்கு உடனடியாக கொரோனா சோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட்டு வந்துள்ளது.

ஆனாலும், அந்த 8 பேரும் களமிறங்கி விளையாடுவது சரியாக இருக்காது என்பதால், இந்த 8 வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

அதன் படி, அந்த 8 வீரரக்ளில் கேப்டன் ஷிகர் தவான் உட்பட 8 வீரர்கள் இன்று களமிறங்கி விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அந்த 8 பேர் கொண்ட பட்டியலில் கேப்டன் ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, செகல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, கிருஷ்ணப்பா கவுதம்,
இஷான் கிஷன் ஆகியோர் குருணாலுடன் நெருக்கமாக இருந்த வீரர்களாக அறியப்பட்டுள்ளனர். எனினும், இந்த 8 வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு
இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று நடைபெறும் 2 வது டி20 போட்டியில் முற்றிலுமாக புதிய வீரர்கள் இந்திய அணியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன் படி, புவனேஷ்வர் குமார் இன்றைய போட்டியில் கேப்டனாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இன்றைய போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ராகுல் சாகர், தீபக் சாகர், குல்தீப் யாதவ், சக்காரியா, வருண்
சக்ரவர்த்தி என்று புது வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இன்று இரவு 8 மணிக்கு 2 வது டி20 நடைபெறும் நிலையில், நாளைய தினம் வியாழக்கிழமை, 3 வது டி20 போட்டி நடைபெறும் என்றும், இலங்கை கிரிக்கெட்
வாரியம் தற்போது உறுதி செய்துள்ளது.

முக்கியமாக, இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இலங்கையிலிருந்து திரும்பும் என்றும், ஆனால் குருணால் பாண்டியா மட்டும்
தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பிறகே, அவர் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்தியா திரும்புவார் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.