இந்தியா முழுவதும் 2 ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஊடுருவிய கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டது.

 India under lockdown for 2nd phase

இந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அவசியம் தேவை என்று பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதனிடையே, நேற்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரேனா நோய்த் தொற்றுக்கு எதிராக மக்கள் அனைவரும் வலிமையுடன் போராடி வருவதாகவும், பொதுமக்களின் பொறுமை மற்றும் தியாகத்தால் மட்டுமே கொரோனாவிற்கு எதிரான பாதிப்பு, இந்தியாவில் குறைந்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

 India under lockdown for 2nd phase

“உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று எப்படிப் பரவி வருகிறது என்பது நம் அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சூழலில், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகளுக்கும், அதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கும்.. நீங்கள் தான் சாட்சி என்றும் புகழாரம் சூட்டினார்.

“இந்தியாவில் கொரேனா பாதிப்பு எண்ணிக்கை, 550 யை எட்டிய உடனேயே, 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகவும், உலகின் வலிமையான நாடுகளில் நிலவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை, இந்தியாவுடன் ஒப்பிடும்போது, நாம் இந்த பிரச்சினையை மிகவும் சரியான முறையில் கையாண்டு இருக்கிறோம் என்பது, நம் அனைவருக்கும் புரியும் என்றும் கூறினார்.

 India under lockdown for 2nd phase

“ஊரடங்கினால் நம் நாடு பெரிய அளவில் பலன் அடைந்து உள்ளதாகவும், பொருளாதார ரீதியாக மட்டும் இதனைப் பார்த்தால் நாம் மிகவும் அதிகமான விலை கொடுத்தது போல் இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார இழப்பை விட மக்கள் உயிர் முக்கியம் என்றும், மக்களின் உயிருக்கு ஒப்பீடு எதுவும் கிடையாது” என்றும் சுட்டிக்காட்டினார். 

“இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இது நாள் வரை நாம் கடைப்பிடித்த கட்டுப்பாட்டை மேலும் தொடரவேண்டும். கொரோனா நோய்த்தொற்று புதிய இடங்களுக்குப் பரவுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில், இந்த ஒரு வாரக் காலம் தான் மிக முக்கியம் என்றும், இதனால் மக்கள் அனைவரும் ஊரடங்கைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குறிப்பாக, இனி வீட்டை விட்டு யாரும் வெளியே வந்தால், அவர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று இரவு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அடுத்தகட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.