இந்திய வீர‌ர்களின் தியாகம் வீணாகாது என்றும், தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயார் நிலையில் உள்ளது என்றும் இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின்போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, லடாக் எல்லை நிலவரம் குறித்தும், ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

India response at ladakh border china standoff

இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார்நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இதனை விமானப் படை தலைமை தளபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

குறிப்பாக, இந்திய விமானப் படையின் சுகோய் 30 எம்.கே.ஐ., மிராஜ் 2000, ஜாக்குவார் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

India response at ladakh border china standoff

மேலும், லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அமெரிக்க அபாச்சே வகை ஹெலிகாப்டர்கள் மிக அருகிலேயே தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் வகையில் அவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. .

அத்துடன், இந்திய படை வீரர்களை விரைந்து அழைத்துச் செல்வதற்காக லே விமானப்படைத் தளத்தைச் சுற்றி சினூக் ரக ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படை வீரர்களை அழைத்துச் செல்லவும், பொருட்களைக் கொண்டுசெல்லவும் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில், எம்.ஐ.-17வி5 நடுத்தர ரக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

India response at ladakh border china standoff

அதேபோல், இந்தியா தனது விமானப் படையை குவிக்கும் முன்பே, லடாக்கின் கிழக்குப் பகுதியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா குவித்துவைத்துள்ளது. இதனால், சீன விமானப்படையினர் ஹோட்டன், கர் குன்சா பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, லடாக் மற்றும் திபெத் பிராந்தியத்தை சுற்றியுள்ள லே, ஸ்ரீநகர், அவந்திபூர், பரேலி, ஆதம்பூர், ஹல்வாரா, அம்பாலா, சிர்சா என பல்வேறு தளங்களிலிருந்து இந்திய விமானப்படையால் பதிலடி கொடுக்க முடியும் என்றும், இந்த குறிப்பிட்ட இடங்களில் இந்திய விமானப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

India response at ladakh border china standoff

இந்நிலையில், ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, “அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும் என்றும், கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த  தியாகம் ஒருபோதும் வீணாகாது” என்றும் தெரிவித்தார்.

"இந்தியா எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும், தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளதாகவும்”  பதாரியா கூறினார். 

இதனால், இந்திய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. மேலும், சீனாவுக்கு எதிரான போருக்கு இந்தியா தயாராகிவிட்டதாகவே தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.