அமெரிக்காவின் ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமானது, உலகளவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கையை தொகுத்து வெளியிட்டு வருகிறது. 

இந்தப் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, உலகளவில் 29,006.003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,625,959 பேர் குணமடைந்துள்ளனர். 9,24,105 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து பிரேசிலில் 37,23,206 பேர் மீண்டனர். இந்தியாவில் 37,80, 107 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகளின் புள்ளிவிவரத்தின்படி குணமடைந்தவர்களின் விகிதம் 78 சதவீதமாக உள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 512 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 37, 80,107 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் இடைவெளி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அந்த இடைவெளி 27,93,509 ஆக உள்ளது. இந்தியாவில் தற்போது 9,86,598 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 48, 46,427 ஆக உள்ளது.

இதற்கிடையில் இந்தியாவில் நான்கு மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, 14-19 லட்சம் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும், 37- 78 ஆயிரம் மரணங்களை தடுத்துள்ளதாகவும் லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் முதல் நாளான இன்று லோக்சபாவில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசிய போது, ``ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்த நான்கு மாதத்தில் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கவும், போதிய நபர்களை தேர்வு செய்யவும், பிபிஇ, என்-95 மாஸ்க்குகள், வென்டிலேட்டர்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க பயனுள்ளதாக இருந்தது. அப்போது இருந்ததை விட, தற்போது 36.3 மடங்கு தனிமைபடுத்தப்பட்ட படுக்கைகள், 24.6 மடங்கு ஐசியு படுக்கைகள் அதிகரித்துள்ளன. அப்போது, இந்தியாவில் தரமான பிபிஇ சாதனங்கள் இல்லை. ஆனால், தற்போது தேவையான அளவு உள்ளதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்றும் குறைவாக உள்ளது. 10 லட்சம் பேருக்கு 3,328 ஆக உள்ளது. உயிரிழப்பும், 10 லட்சம் பேருக்கு 55 ஆக உள்ளது. 14-19 லட்சம் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. 37 ஆயிரம் முதல் 78 ஆயிரம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்