கொரோனா ஊரடங்கு காலத்தில் கடும் வீழ்ச்சியில் இந்திய பொருளாதாரம் மூழ்கி உள்ள நிலையில், ஏழைகளின் வாழ்வில் காரிருள் சூழ்ந்துவிட்டதா? பசியும் பட்டினியும் இந்தியாவில் தொடங்கி விட்டதா? என்ற மிகப் பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனா என்னும் மிகப் பெருந் தொற்று, உலகையே தும்சம் செய்து வருகிறது. அது, பறவாத நாடே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு, உலகம் முழுக்க பரவி உள்ள கொரோனா என்னும் வைரஸ் நோய், உயிர்களோடு சேர்த்து, ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்த்து விட்டு வருகிறது.

இப்படியான நெருக்கடியான பொருளாதார வீழ்ச்சியால், அமெரிக்காவில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதேபோன்ற தாக்கம் பல்வேறு உலக நாடுகளிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் தற்போது எதிரொலித்துக்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் மூழ்கி உள்ளதால், இதற்கு கொரோனா பொது முடக்கம் தான் காரணமா? அல்லது அரசின் தவறான முடிவுகள் தான் காரணமா என்று, ஊடகங்கள் எல்லாம் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கின்றன.

இந்த பொருளாதார தாக்கம், தற்போது இந்தியாவில் பசி பட்டினி சாவைத் தொடக்கி வைத்துள்ளதாகவும், தற்போது புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, “மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, நாட்டில் விலை வாசியை அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாகச் சரிவை ஏற்படுத்தும் முடிவுகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்தது தான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்றும், பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம், நேற்று கூறியிருந்தார். அவரைப் போலவே, மேலும் சில பொருளியல் வல்லூனர்களும், இதே போன்ற சில கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

மேலும், பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். ஜிடிபி 23.9 சதவீதம் சுருங்கியுள்ளது. இதன் தொடக்கம் எது?

இந்த 2020 ஆம் ஆண்டில் நாம் சந்தித்து வரும் இந்த பொருளாதார வீழ்ச்சியின் விதையானது, கடந்த 2016 ஆம் ஆண்டில் துளிர் விட்டது என்றும், கடந்த 2016 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பின் தாக்கமே, இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்திவிட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கொண்டுவந்தது முதல் தற்போது வரை கடந்த 4 ஆண்டுகளாகப் பொருளாதாரம் துளியும் உயரவில்லை என்றும், பொருளாதார வல்லூநர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதன் தாக்கம், தற்போது கொரோனா பொது முடக்கத்தில் மிகப் பெரிய அளவில் எதிரொலிக்கிறது என்றும், ஆழமாக அலசுகிறார்கள் வல்லூநர்கள்.

அதே நேரத்தில், “பொருளாதார சரிவுக்கு கடவுளின் செயலே காரணம்” என்று, நிதி அமைச்சர் குற்றம்சாட்டினாலும், அதற்கு முக்கிய காரணம் பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்து தவறான பொருளாதார கொள்கை தான்” என்றும், ஜிடிபி புள்ளியை அதிகரித்துக் காட்டுவதற்குக் கணக்கிடும் முறையை 
மாற்றினார்கள்” என்றும், பொருளாதார வல்லுநர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக, சாதாரண மக்கள் செய்யும் செலவு 27 சதவீதம் சுருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, ஏற்றுமதி 20 சதவீதமும், இறக்குமதி 40 சதவீதம் குறைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், குறைந்தபட்சம் கொரோனா ஊரடங்கு காலத்திலாவது மக்களுக்கு நேரடியாகப் பணத்தை நிவாரணமாக மத்திய அரசு கொடுத்திருக்க வேண்டும், ஆனால் அதையும் செய்ய மத்திய அரசு தவறி விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இதை எதையுமே செய்யாத நிலையில், ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி தற்போது குறைந்துவிட்டது. உணவுக்கு செலவு செய்யக் கூட பணம் இல்லாத நிலையில், மக்கள் தற்போது இருக்கிறார்கள். உணவுக்குச் செலவு செய்யக் கூட பணம் இல்லாத நிலை என்றால், அதற்குப் பஞ்சம் என்று அர்த்தம். அந்த பஞ்சம் தற்போது இந்தியாவில் உருவாகி உள்ளது. 

இந்த பஞ்சம்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 வயது குழந்தையின் உயிரை பறித்துக்கொண்டது.

சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பகவான் கென்பரா கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பட்டினியால் நேற்று உயிரிழந்து உள்ளது. இந்த குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு இல்லாததால், அரசின் எந்த ஒரு இலவசத் திட்டங்களும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களைப் போல, அந்த பகுதியில் நிறைய குடும்பங்களுக்கு ரேசன் கார்டு இல்லை என்றும், இவர்களைப் போலவே, அந்த பகுதிகளில் நிறைய குடும்பங்கள் சாப்பாட்டிற்கே வழியின்றி படும் பஞ்சத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை பசியால் இறந்தது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் எஸ்.கே.மர்காம் பேசும்போது, “பசியால் தான் குழந்தை இறந்து விட்டது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், உறுதியான தகவல் கிடைக்காத போது பசியால் குழந்தை இறந்தது என்ற செய்தியைப் பரப்புவது சரியாக இருக்காது” என்றும், கூறினார்.

மேலும், இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் அரசின் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2 வயது குழந்தை பட்டினி சாவால் 
இறந்த தகவல் அந்த மாநிலத்தில் பரவியதால், இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது போன்ற வறட்சியான சூழலைப் போக்கி, மக்கள் வாழ சுமுகமான சூழலை உருவாக்கித் தருவதே அரசின் கடமை. பெரும் செல்வந்தர்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு கவனம் செலுத்தாமல், ஏழை எளிய மக்களின் வயிற்றுப் பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண்பதே அரசின் இன்றியமையாத 
கடமையாகும்.

இந்த கொரோனா பொது முடக்கத்தில், ஏழைகளின் வாழ்வில் காரிருள் சூழ்ந்துவிட்டதோ, பசி பட்டினி இந்தியாவில் தொடங்கி விட்டதோ? என்ற கேள்வியைத் தான் எழுப்புகிறது. இது போன்ற கேள்விகள் எழாமல் ஆட்சி செலுத்துவதே அதிகார வர்க்கத்தின் அழகு பணி. பொதுமக்களின் வாழ்வில் காரிருள் சூழா வண்ணம் அரசு பார்த்துக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பே இப்போது எல்லோருக்குள்ளும் எழுகிறது.