திரு.வி.க.நகரில் மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக நடந்து சென்று தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

mkstalin

சென்னையில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமையை தொடங்கி வைப்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திரு.வி.க.நகர் பகுதிக்கு சென்றார். திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு விண்ணப்பபடிவங்களை வழங்கி  தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்தார். காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கைகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள 18-வது தெரு வழியாக சென்ற மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கி தி.மு.க.வில் சேருமாறு கேட்டுக்கொண்டார். பெண்ணினமே, பெண்ணினமே தமிழகம் செழிக்க தி.மு.க.வில் இணைவீர், இளைஞர்களே, இளைஞர்களே தமிழகம் செழிக்க தி.மு.க.வில் இணைவீர் என்ற நோட்டீசையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார். மு.க.ஸ்டாலின் தங்கள் தெருவுக்குள் நடந்து வருவதை பார்த்ததும் பெண்களும், குழந்தைகளும் ஆர்வமிகுதியில் அவருடன் செல்பி எடுக்க முனைந்தனர். அவர்களின் விருப்பத்தினை அறிந்த மு.க.ஸ்டாலின், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

மேலும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினார். சாலையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் முககவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மு.க.ஸ்டாலினின் பயணம் தொண்டர்களிடம் புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கேயே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடம் வழங்கினர். தி.மு.க. அரசின் திட்டங்கள் பயன் உள்ளதாக இருப்பதாக மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பெண்கள் தெரிவித்தனர். மேலும் கட்டணமில்லா பஸ் பயணம் தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

அதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வை மறைந்த தி.மு.க. நிர்வாகி கே.ஜி.ரவிச்சந்திரன் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு ரவிச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.