கள்ளக் காதலுடன் உல்லாசம் இருந்ததைத் தட்டிக்கேட்ட கணவரை, கூலிப்படை ஏவி மனைவி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அடுத்து உள்ள இரூர் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முத்து என்பவர், தனது மனைவி 35 வயதான  மகாலட்சுமி உடன் வசித்து வந்தார். கணவன் முத்து, அந்த பகுதியில் சாலை பணியாளராக வேலை பார்த்து வந்தார். 

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்த நிலையில், போக போக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், அங்குள்ள சி.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த உல்லாச வாழ்க்கையானது, ஒரு கட்டத்தில் கணவன் முத்துவிற்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் முத்து, இது குறித்து தனது மனைவியிடம் சண்டைக்கு சென்று உள்ளார். 

அத்துடன், தன் மனைவியை எச்சரித்த முத்து, “இனிமேல் இந்த வேலை வச்சுக்க கூடாது என்று, எச்சரித்துவிட்டு” மனைவியைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

இதன் காரணமாக, முத்துவின் மனைவி தனது கள்ளக் காலனைப் பார்க்க முடியாமல் தவித்து வந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, கள்ளக் காதலர்கள் இருவரும் திட்டம் போட்டு, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைக் கொலை செய்ய, அவர் மனைவியே திட்டம் தீட்டி உள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் தனது பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, அங்குள்ள சிறுகனூர் அருகே இருக்கும் சி.ஆர். பாளையத்திற்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் அவர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்குள்ள பைந்தமிழ் தோட்டம் என்னும் பகுதி அருகே முத்து சென்றுகொண்டு இருந்த போது, அந்த பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள், 
முத்துவை வழி மறித்து நின்று உள்ளனர். இதனால், முத்துவும் “என்ன?” என்று, கேட்டு உள்ளார். 

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால், முத்துவை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக, அந்த வழியாகச் சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், முத்துவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “முத்துவின் மனைவி மகாலட்சுமிக்கும் சி.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது” முதலில் தெரிய வந்தது. 

அத்துடன், இந்த கள்ளக் காதலுக்குக் கணவன் முத்து இடையூறாக இருந்ததால், மனைவி மகாலட்சுமியே கூலிப்படையை ஏவி கணவன் முத்துவை கொலை செய்தது” தெரிய வந்தது. 

இதையடுத்து, தற்போது தலைமறைவாக இருக்கும் மகாலட்சுமி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கும்பலைத் தனிப்படை போலீசார் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.