“எஸ்.வி.சேகர் சிறைக்குப் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்றால், அதனை அரசு நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி என்றும், பாஜகவை அனுசரித்துச் செல்லும் கட்சிகளுடன் தான், சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். 

இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும்” என்று குறிப்பிட்டார். 

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிப்பது கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதால், அதைப் பேச விரும்பவில்லை” என்றும், கூறினார். 

மேலும், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும், கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமுகமான முடிவு எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

“கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

“அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும்” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுப் பேசினார். 

அத்துடன், தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணி பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து கூறிய பிறகே, அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்” என்று குறிப்பிட்டார்.  

“துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அப்போது, நடிகர் எஸ்.வி.சேகர் பற்றிய கேள்விகளைச் செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எஸ்.வி.சேகர் சிறைக்குப் போக வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை என்றால், அதனை அரசு நிறைவேற்றும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதனால், அந்த செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை எழுந்தது. அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். 

பாஜகவை சேர்ந்தவரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமீப காலமாகத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனால், முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம், அவரைப் பற்றி விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல், “முதலமைச்சர் வேட்பாளரை முன்னிறுத்தித் தான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும்” என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

“முதலமைச்சர் பழனிசாமி தலைமையையே மக்கள் விரும்புகிறார்கள்” என்றும் குறிப்பிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பி.எஸ். வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்” என்றும், உறுதிப்படத் தெரிவித்தார். 

மேலும், “ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓபிஎஸ் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்” என்றும், மீண்டும் கூறினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இதனிடையே, எதிர்வரும் சட்ட மன்ற தேர்தல் குறித்து அதிமுக கட்சியினர் தங்களது முதலமைச்சர் வேட்பாளர் பற்றி ஆளுக்கொரு கருத்துக்களைப் பதிவு செய்து வருவது, அக்கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைக் காட்டுகிறது. இதன் காரணமாக அதிமுகவிற்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.