2020  ம் ஆண்டு முழுவுதமேவும், கோவிட் -19 கொரோனா தொற்றுநோயின் வசமென்றே சொல்ல வேண்டியுள்ளது. அந்தளவுக்கு, அனைத்து துறைகளையும் தாக்கியிருக்கிறது இந்தக் கொரோனா தொற்று. இது கிரிக்கெட் உலகத்திலும் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அப்படியான ஒன்றாக, ஆஸ்திரேலியாவில் நடை பெறவிருந்த  டி 20 உலகக் கோப்பையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று (திங்கள்கிழமை) ஒத்திவைத்தது.

இந்த ஒத்திவைப்பு குறித்துப் பேசிய ஐ.சி.சி., "கோவிட் -19 தொற்றுநோய் (COVID-19) காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டி 20 உலகக் கோப்பை, அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் போட்டிகளை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மே மாதத்தில் ஐ.சி.சி.க்கு அறிவித்தது. 16 சர்வதேச அணிகளுக்குத் தனிமைப்படுத்தும் வசதி ஏற்பாடு செய்வது கடினம் எனத் தெரிவித்திருந்தது.

இது மட்டுமன்றி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் முன்மொழியப்பட்ட ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடருக்கான அட்டவணையை மார்ச்-ஏப்ரல் மாதங்களுக்குப் பதிலாக நவம்பரில் விளையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐசிசி-தான், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஏற்பாடு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) வழி வகுக்கும். தற்போது ஒத்தி வைத்தது போல, ஐ.பி.எல் போட்டியையும் வருங்காலத்தில் இவர்கள் ஒத்திப்போடுவார்களோ என்ற ஐயம் இப்போது பலரின் மனதிலும் எழுந்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் குறைவதாக தெரியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டால், மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் IPL 2020 தொடர் நடத்தப்படலாம். இதுபற்றி பி.சி.சி.ஐ.-யை சேர்ந்த கவுன்சில் உறுப்பினர் ஒருவர், "ஆசிய கோப்பையை ஒத்திவைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அது இறுதியில் ரத்து செய்யப்பட்டது. ஆகவே ஐபிஎல் தொடர்ப் பற்றி எதுவும் கணிக்க இயலாது. எதுவாகினும், உலகக் கோப்பை குறித்த ICC முடிவிற்குப் பிறகுதான், ஐ‌பி‌எல் தொடர் குறித்து அடுத்தக்கட்ட திட்டத்தை ஆலோசனை செய்ய முடியும் என்று" கூறியிருந்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கிரிக்கெட் மீதான இப்படியான தொடர் நெகடிவ் அப்டேட்டுகள், மிகவும் வேதனைய அளித்துள்ளன.

இந்நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வளர்க்கவும், அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவும், பொதுமேலாளர் சபா கரீம் எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அவரை பதவி விலகுமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளதாகக் கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகிவந்தன. இதற்குப் பின்னணியாக, அவர் சரியாகத் திட்டமிடல் எதையும் முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக கொரோனா தொற்றுக் காலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்துவது, மாற்று வழியில் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்தலாம், வீரர்களின் பயிற்சி, மாற்றுத்திட்டம் என எதைப்பற்றியுமே சபா கரீம் பொதுமேலாளராக இருந்து கொண்டு ஆலோசிக்கவில்லை எனவும் அது குறித்துத் திட்டமிடல்களை முன்வைக்கவும் இல்லை எனவும் பிசிசிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இப்போது சபா கரீம் பிசிசிஐயின் பொதுமேலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நிர்வாகிகளுக்கு சபா கரீம் அனுப்பி வைத்தார். இந்தியா கிரிக்கெட் அணியில் முன்னாள் வீரராக இருந்த சபா கரீம் கடந்த கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐ அமைப்பின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். 54 வயதாகும் சபா இந்தியாவிற்காக இதுவரையில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கொரோனாவின் தாக்கம் குறையும்வரையில், இன்னும் நிறைய மாற்றங்கள் கிரிக்கெட்டில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா