சென்னையில் வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை கணவரே ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான விஜயபாரதி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதே போல், சென்னை அயனாவரத்தை சேர்ந்த அமுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழல் நிலையில், விஜயபாரதிக்கும் அமுாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். 

அவர்களுக்குள் காதல் முற்றிய நிலையில், இருவரும் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, விஜயபாரதி - அமுதா தம்பதியினர் அயனாவரம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இவர்களது திருமண வாழ்க்கை சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்ற நிலையில், அவர்களுக்குள் வரதட்சணை பிரச்சனை எழுந்துள்ளது.

குறிப்பாக, “10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்க வேண்டும்” என்று, கணவன் விஜயபாரதி மனைவி அமுதாவிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக விஜயபாரதி - அமுதா இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

மேலும், “10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகத் தந்தால் மட்டுமே, நான் உன்னுடன் வாழ்வேன்” என்று கூறி மனைவியை அவர் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அப்படி, “நீ 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகத் தரவில்லை என்றால், உன்னுடைய ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு, உன் மானத்தை வாங்கி விடுவேன்” என்று கூறியும், விஜயபாரதி மனைவி என்றும் பார்க்காமல் அமுதாவை மிரட்டி வந்துள்ளார்.

கணவன் - மனைவி இடையே வரதட்சணை பிரச்சனை பெரிதான நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த அமுதா, கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு, தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டர்.

அம்மா வீட்டிற்கு சென்ற பிறகு, “என் கணவர் வரதட்சணை கேட்டு, என்னை கொடுமைப் படுத்துகிறார்” என்றும், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு வருமாறு விஜயபாரதியை அழைத்துள்ளனர். ஆனால், அவரோ “நான் விழுப்புரத்தில் இருக்கிறேன். சென்னை வர எனக்கு இபாஸ் கிடைக்கவில்லை” என்றும் கூறி விசாரணையைத் தள்ளிப் போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று விஜயபாரதி - அமுதா இடையே தொலைப்பேசியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் விஜயபாரதி, மனைவி அமுதாவின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அமுதா, வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்பாக வீட்டில் உள்ளவர்கள் அவரை தடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தெரிகிறது. மேலும், விஜயபாரதியின் இந்த செயல் குறித்து, அவர்கள் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.