கடந்த சில நாட்களாக வியட்னாமில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, சூறாவளி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர்.

வியட்னாம் நாட்டின் மத்திய மற்றும் மத்திய உயர்ந்த நில பகுதிகளில் மொலாவே என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது.  இதனால் கனமழை பொழிந்தது.  பலத்த காற்று வீசியது.  இதனை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு அந்த பகுதிகள் அதிகம் பாதிப்படைந்துள்ளன. 

இந்த பாதிப்பில், குவாங் நாம், இன்கே ஆன், தக்லக் மற்றும் கியா லாய் ஆகிய மாகாணங்களில் 27 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  50 பேரை காணவில்லை.  67 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மத்திய செயற்குழு தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை பேரிடரால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் சில சேதமடைந்துள்ளன.  இதேபோன்ற 63 பாலங்களும் சேதமடைந்தன.  வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வலிமையான சூறாவளி பாதிப்புக்கு ஆளான உள்ளூர் மக்களுக்கு உதவவும், தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ளவும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என 10 ஆயிரத்து 420 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.