மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு, ஒப்பந்த ஆண் ஊழியர் பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் சங்கு மணி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல, உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி வீடுகளை விட்டு, மருத்துவமனையில் தான் தஞ்சம் அடைந்துள்ளது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும், மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு, சக ஆண் ஊழியர்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மதுரையில் முன்பை விட தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து, அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

அந்த நோயாளிகளை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், களப் பணியாற்றிச் சேவையாற்றி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆண் - பெண் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, மதுரை அரசு மருத்துவமனையில் தூய்மை பணி, வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அங்குள்ள 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி வருகிறது. இந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர் மோகன், தன்னுடன் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களைத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு தருவதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஒப்பந்த பெண் பணியாளர்கள் கூறுகையில், “ மேற்பார்வையாளர் மோகனுக்குப் பிடித்தது போல் நடந்து கொண்டால் தான் வேலைகளைக் குறைவாகத் தருவார். இல்லை என்றால், அதிகப் படியான வேலைகளைத் தந்து, பணிச்சுமையை அவர் ஏற்படுத்தி விடுவார்” என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், “மோகனுக்கு பிடித்தது போல் நடந்துகொள்ளா விட்டாலும், வேலையை விட்டு நீக்கி விடுவேன்” என்று அவர் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

“மோகனின் டார்ச்சருக்கு பயந்து, பல பெண்கள் குடும்பத்தில் பிரச்சனைகளுக்கு ஆளாகி வருவதாகவும், இதன் காரணமாகப் பல பெண்கள் பணியிலிருந்து நின்று விட்டனர்” என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், “தற்போது பணி ஆற்றி கொண்டிருக்கும் அனைத்து பெண்களும் இது போன்ற பாலியல் தொந்தரவுகளை அவர் தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்றும், இது குறித்து மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் பல முறை எழுத்துப் பூர்வமாகப் புகார் அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

“கொரோனா காலத்தில் பலரும் வேலையின்றி தவித்து வரும் நிலையில், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக இதுபோன்ற வேலைகளுக்கு நாங்கள் வருகிறோம். ஆனால், இங்கு எங்களது குடும்பச் சூழல் மற்றும் வறுமையைப் பயன்படுத்தி எங்களுக்கு பாலியல் தொல்லை தருவது எந்த வகையில் ஞாயம்?” என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

“பணி இடத்தில் நிகழும் இதுபோன்ற பாலியல் தொல்லையால், உண்மையாக உழைக்கும் பல பெண்கள், மன ரீதியாகத் துன்பப்பட்டு, கடும் கன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும், இனியும் சம்மந்தப்பட்ட மோகன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை” என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக, “மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடமும், மோகன் மிகவும் தவறாக நடந்துக் கொள்வதாகவும்” பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி உள்ளனர்.

பெண் ஊழியர்களின் புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்கு மணி தற்போது உறுதி அளித்துள்ளார். தற்போது, இது தொடர்பான துறை ரீதியான விசாரணையும் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.