“ராசி பலன்கள் பரிகாரங்கள் பொதுவாக எல்லாருக்கும் பலிப்பதில்லை ஏன்?” என்பது குறித்து பிரபல ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர் விளக்கம் தருகிறார்.

“ஜோதிடத்தால் எதிர் காலத்தை சொல்ல முடியாது, ஜோதிடம் அறிவியல் அல்ல எனச்சொல்லி ஜோதிடத்தையும், ஜோதிடரையும் பகுத்தறிவு என்கிற பெயரில்
ஏளனபடுத்த கூட்டம் ஒன்று எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இதற்கு முதல் காரணம் பொதுவாக பன்னிரண்டு ராசிகளுக்கும் சொல்லப்படும் கோச்சார பலன்களே. 

ஒவ்வொரு மனிதனுக்கும் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள சுய ஜாதகம் அவசியம் என்ற புரிதல் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். குரு பெயர்ச்சி,
சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்களை விட தனி நபருக்கு சுய ஜாதகத்தில் நடக்கும் திசையின் பலன்களே ஜாதகரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்.

குரு பெயர்ச்சி:

குரு பெயர்ச்சி வருடம் ஒரு முறை நடைபெறும். 12 ராசிகளான மேசம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் தங்குவார். அதனால், குருவிற்கு 12 வருடம் ஒரு சுற்று. அதாவது வான் மண்டலத்தில் சூரியனை வியாழன் கோள் ஒரு முறை சுற்ற 12 வருடங்கள் ஆகும். அதை தான் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாக கோச்சாரத்தில் குரு ராசிக்கு 2,5,7,9,11 ம் இடத்தில் இருந்தால் நற் பலனையும்,1,3,4,10 ஆகிய இடத்தில் சுமாரான பலன்களையும் 6,8,12 ஆம்
இடத்தில் தீய பலனையே தரும். இதுவும் ராசிக்கு ராசி பலன்கள் மாறுபடும்.

சனிப்பெயர்ச்சி: 

சனி பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். 12 ராசிக்கும் ஒரு சுற்று 30 வருடம். சூரியனை சனி ஒருமுறை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. சனி 3,6,11ல் யோகத்தையும், 5,9,10 ல் சுமாரான பலன்களையும், ராசிக்கு 4ல் அர்த்தாஷ்டம சனி ஆகி முடக்கத்தையும், 7 ல் கண்ட சனியாகி பல பாதிப்புகளையும் தருவார். 8 ல் அஷ்டம சனியாகி வாட்டுவார். 12,1,2 ஆகிய இடங்களில் ஏழரை சனியாக அமர்ந்து சொல்ல முடியாத வேதனைகளை கொடுத்து வாழ்க்கையை புரிய வைப்பார். சனியின் பலன்களும் சிலருக்கு அதிக பாதிப்புகளையும் சிலருக்கு அதிக நன்மைகளையும் அள்ளி வழங்குவார்.

ராகு, கேது பெயர்ச்சி: 

பூமியின் நிழல் என சொல்லப்படும் ராகு கேது1.1/2 வருடங்கள் ஒரு ராசியில் இருப்பர். எதிர் திசையில் நகரும். ஒரு சுற்று 18 ஆண்டுகள். வக்ரம், அதிசாரம் கிடையாது. 3,6,9,11 ல் நன்மை தருவார்.ராகு சனியை போல பலனும், கேது செவ்வாய் போல பலனும் தருவர். ராகு, கேது நிற்கும் நட்சத்திரம் பார்க்கும் கிரகத்தித்கேற்ப பலன் தருவர். "ராகு போல் கொடுப்பார் இல்லை, கேது போல் கெடுப்பார் இல்லை" என்பது பொது பலன்.

வாழ்க்கையில் உடனடி மாற்றங்களை தரும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி , ராகு - கேது பெயர்ச்சி தவிர ஏனைய 5 கிரகங்களுக்கும் பெயர்ச்சி உண்டு. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சந்திரன் 2 நாள் 6 மணி, சூரியன் 1 மாதம், செவ்வாய் 1, 1/2 மாதம், புதன் 1 மாதம், சுக்கிரன் 1 மாதத்தில் பெயர்ச்சி அடையும். இதில் கிரக வக்ரம், அதிசாரம், அஸ்தமனம் உண்டு. ஒவ்வொரு பெயர்ச்சிக்கும் பலன்கள் ஒவ்வொரு ஜாதகருக்கும் மாறும்.

திசை பலன்:

"வருச வருசம் எத்தனையோ கிரக பெயர்ச்சி பலன் இது வரை கேட்கிறேன். ஆனால், என் வாழ்க்கை அப்படியே தான் இருக்கு" என புலம்புபவர்களையும், நான் உழைப்பை நம்பி வாழுறேன், "ஜோதிடத்தை நம்பி வாழ்ந்தா பொளைக்க முடியுமா பொளப்ப பாருங்க" என பேசுபவர்களும் உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சி பலன்கள் எதிர்பார்த்த படி சிலருக்கு பலிக்காமல் போவதற்கு காரணம், அவரவர் சுய ஜாதகமே காரணம். அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் திசையை பொறுத்தே வாழ்க்கையில் நல்லது கெட்டது நடைபெறும். 

"திருட போனாலும் திசை அறிந்து செல்" என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் ஜாதகத்தில் திசை யோகமாக அமைந்தால் தீமை செய்பவன்,
கெட்டவன் என உலகமே அறிந்திருந்தாலும் தண்டனை பெறாமல் சொகுசாக வாழ்வார்கள். உலகில் நல்லவன் - கெட்டவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இப்படி எத்தனையோ ஏற்ற தாழ்வு இருந்தாலும், ஒருவனுக்கு அமையும் திசையே ஜாதகரை அரசனாகவோ, அடிமையாகவோ மாற்றும் என்பதே உண்மை” என்கிறார் பிரபல ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர்.

                                                                                                                                                 - தொடரும்..