குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப்-2 பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் ஆகியவற்றில் உள்ள 116 இடங்கள், குரூப்-2ஏ பதவிகளில் வரும் நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் தேர்வர்கள் இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற 21-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை TNPSC நேற்று வெளியிட்டு இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் இருந்து ஒரு முறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தேர்வர்கள் அனைவரும் மேலும் அந்த ஹால்டிக்கெட்டில் உள்ளது போல பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது. அதில் குறிப்பாக தேர்வர்கள் 8.30 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வர வேண்டும் என்றும், 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதனைப்போல செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் மின்சாதன பொருட்களை கொண்டு வர தடைவிதிக்கப்படுகிறது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை அதில் வழங்கியிருக்கிறது. தேர்வர்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ள டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் டி.என்.பி.எஸ்.சி. ஹால் டிக்கெட்டில் தெரிவித்து இருக்கிறது. அதில், தேர்வர்கள் முககவசம் அணிந்து வந்தால்மட்டுமே தேர்வு நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடத்துக்குள் எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் முகக்கவசம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு எழுதுபவர்கள், தேர்வறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால், அடையாளம் சரிபார்ப்புக்கு கேட்கும்போது மட்டும் முககவசத்தை அகற்ற வேண்டும். தேர்வர்கள் தனிப்பட்ட உடமைகள், எழுது பொருட்களை பகிர்வதற்கு அனுமதி வழங்கப்படாது. வெளிப்படையான பாட்டிலில் சானிடைசர்ஸ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளி உள்பட கொரோனா விதிமுறைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.