ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான சங்கர் போலீசாரால் இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து, சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்தார். 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், “ரவுடி சங்கர், சென்னை புது ஆவடி சாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அங்கு விரைந்த சென்ற போலீசார், ரவுடி சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, ரவுடி சங்கர் காவலர் முபராக் என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில், அவர் பலத்த காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின் போது, அங்கு உடனிருந்த காவல் ஆய்வாளர் நட்ராஜ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சங்கருக்கு உடம்பில் குண்டடிபட்ட நிலையில், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

குறிப்பாக, ரவுடி சங்கர் காவலர் முபராக் என்பவரை அரிவாளால் வெட்டி உள்ளார். அவர் வெட்டுவதற்கு முன்பு, உடன் இருந்த காவல் காவல் ஆய்வாளர், ரவுடி சங்கரை எச்சரித்திருக்கிறார். ஆனால், அதையும் மீறி அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி, காவல் ஆய்வாளர் சங்கரை சுடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, காவலர் முபராக் காயம் பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடி தடி வழக்குகள் மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் என மொத்தம் 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுடன், அவர் மீது 5 பிடிவாரண்டுகள் உள்ளது.

9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழல் நிலையில், கஞ்சா வழக்கில் பிடிபட்டபோது தான், இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

குறிப்பாக, இந்த என்கவுண்டர் 3 குண்டுகள் ரவுடி சங்கர் மீது பாய்ந்து உள்ளன. அதன்படியே, அவர் உயிரிழந்து இருக்கிறார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பிறகு, இன்னும் சில தகவல்களைக் கூறமுடியும்.

சென்னையில் உள்ள ரவுடிகள் சிலர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தலைமறைவாக உள்ள ரவுகடிகள் தேடி கைது 
செய்யப்படுவார்கள். அவர்கள் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, ரவுடி சங்கர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்பொருள் அங்காடி உரிமையாளரை மாமூல் கேட்டு அரிவாளால் தாக்கிய வழக்கில் தொடர்புடையவர் ஆவர். 

இதனிடையே, சென்னையில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.