சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி துவங்கியது. இதனால், டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

எதிர்பார்ப்புகளை மீறி பெய்த மழையால், சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கடந்த 9 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, பின்னர் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக, சென்னை அருகே கரையை கடந்தது.

l1

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்தது. தொடர் கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பின. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. இதையடுத்து, கடந்த 7 ஆம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. சில தினங்களாக மழை இல்லாத காரணத்தால் உபரி நீர் திறப்பு 250 கனஅடியாக குறைக்கப்பட்டது. 

இந்நிலையில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ள காரணத்தால் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். 

இதன் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

l2

இன்றும் நாளையும், மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், செம்பரபாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21.55 அடியாகவும், நீர்வரத்து 525 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2999 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. 

தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட உள்ளதால், உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  இன்று இரண்டாயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப் படுகிறது. அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்தும் உபரிநீர் திறப்பு, வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 2 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உபரி நீர் திறப்பு அதிகரிப்பு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.