சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

முக்கியமாக, சென்னையில் நேற்று இரவு 2 வது நாளாக பெய்த கன மழை காரணமாக, பல இடங்கில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுகிறது.

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன், சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளான தாம்பரம், மாம்பலம், எழும்பூர், பூரசைவாக்கம், மெரினா கடற்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து மழை நீர் வெற்றம் போல் சாலையில் தேங்கி உள்ளன. இதனால், அந்த பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பெய்து வரும் இந்த கனமழையில் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமாக, இது வரை 107 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உள்ளனர்.

அதே போல், சென்னை மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த வந்த கர்ப்பிணியை மீட்ட சென்னை காவல் துறை அதிகாரிகள் அவரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவருக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர்.

முன்னதாக சென்னையில் நேற்று கொட்டி தீர்த்த கன மழையால் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் முன் எப்போம் இல்லாத வகையில் முற்றிலுமாக அதிகரித்து காணப்பட்டது.  

மேலும்,நேற்று முன் தினம் இரவு பெய்த பலத்த மழையால், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால், தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் தாமதமாக சென்னைக்கு வந்தன. அதிலும், மின்சார ரயில் சேவையும் நேற்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரிதும் நேற்றைய தினம் அவதிக்கு ஆளாகினார்கள்.

குறிப்பாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால், நேற்று மதியம் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வந்த மின்சார ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த நீர் அகற்றப்பட்டு, மீண்டும் நேற்று மதியம் 12 மணி அளவில் மின்சார ரெயில் சேவை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. 

சென்னையில் கனமழை காரணமாக தற்போது எழும்பூர் மற்றும் 3 ரயில்வே சுரங்க பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.