தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது.

அத்துடன், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை இன்னும் தீவிரமடைந்து வருகிறது. இதனால், “தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அத்துடன், “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வழுவடைந்து வட தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் தீவிரமடைந்து வரும் 11 ஆம் தேதி தமிழகம் அருகே வரும்” என்றும், வானிலை மையம் கூறியள்ளது.

மேலும், “காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

முக்கியமாக, “வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அத்துடன், “இன்றைய தினம் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அதே போல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி ,திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூர் பகுதியில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. 

“செய்யூர், மதுராந்தகம், சோழவரத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. தண்டையார்பேட்டை 10 என்கிற அளவிலும், அயனாவரம், கும்மிடிபூண்டி,  அம்பத்தூர் செங்குன்றத்தில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், தாம்பரம், கோவை தெற்கு, ஆலங்காயம், மரக்காணம் ஆகிய பகுதியிகளில் தலா 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக” வானிலை ஆய்வு மையம்  குறிப்பிட்டு உள்ளது.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் தொடர் கன மழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியில் நீர் நிரம்பி, அங்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அதனை சுற்றி உள்ள சுமார் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதே போல், சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட மொத்தம் 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.