குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்தப்பிய விமானி வருண் சிங்கை பெங்களூரு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இன்று காலை தான் ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.  இதை ஆய்வு செய்யும் போது விபத்து குறித்து பல முக்கிய தகவல்கள் தெரிய வரும். 

GROUP CAPTAIN VARUN SINGH HELICOPTER CRASH

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தள்ளாடியபடி மரத்தில் மோதி விழுந்து எரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த மோசமான விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில்  குரூப் கேப்டன் வருண் சிங் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.  85 சதவீத தீக்காயங்களுடன் வருண் சிங் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருண் சிங்கிற்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வருண் சிங்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வருண்சிங்கின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றாலும்கூட அவரது உடல்நிலை சீராகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. 

விபத்து குறித்து வருண் சிங்கின் வாக்குமூலம் முக்கியம் என்பதால் அவரது உயிரை காக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "குரூப் கேப்டன் வருண் சிங் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.

இந்நிலையில், வருண் சிங்-ஐ கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை பெங்களூரு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கியபோது, நடுவானில் 15,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.  ஆனால் சூழ்நிலையை திறம்பட கையாண்ட வருண் சிங், அதை பத்திரமாக தரையிறக்கினார். அவருடைய தீர செயலுக்காக, இந்தாண்டு ஆகஸ்டில் அவருக்கு 'சவுரிய சக்ரா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் வருண் சிங் உத்தரப் பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். விபத்து குறித்து அறிந்த பிறகு அவரின் கிராம மக்கள் வருண் சிங் விரைவாக குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

வருண் சிங்கின் உறவினர் அகிலேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினார் ஆவார். புதன்கிழமை இரவு வருண் சிங்கிற்கு முக்கிய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் அகிலேஷ் பிரதாப் சிங் தெரிவித்திருந்தார்.

GROUP CAPTAIN VARUN SINGH HELICOPTER CRASH

வருண் சிங்கின் குடும்பமே பாதுகாப்புத்துறைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம்தான். இந்திய முப்படைகளிலும் அவரது குடும்பத்தில் இடம் பெற்றுள்ளனர். அவரது தந்தை கர்னல் கிருஷ்ண பிரதாப்  சிங் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வருண் சிங்கின் சகோதரர் லெப்டினென்ட் கமாண்டர் தனுஜ் சிங் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருக்கிறார்.

“கேப்டன் வருண் சிங் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில்தான் வருண் சிங், அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்" என கிருஷ்ண பிரதாப் சிங்கின் மூத்த சகோதரர் தினேஷ் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 

“துயரமான ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய கேப்டன் வருண் சிங் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. வருண் சிங் விரைவில் குணமடைந்து நீண்ட ஆயுள்பெற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.