விழுப்புரத்தில் மாணவியை எரித்துக்கொன்றவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்துள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் 15 வயது மகள் ஜெயஸ்ரீயை, குடும்ப முன் விரோதம் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும், சிறுமியை வீட்டிற்குள் கட்டி வைத்து, துன்புறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, தப்பியோடி உள்ளனர். 

Girl killers should be executed - vijayakant

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமி போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார்.

பின்னர், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய அந்த சிறுமியை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Girl killers should be executed - vijayakant

இந்த கொடுமையான செயலுக்கு, தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த இருவரையும், அதிமுகவிலிருந்து நீக்கி, அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்தது. மேலும், தமிழக அரசு சார்பில், அந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “முன்பகை காரணமாக, பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று, விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.