சேலம் அருகே காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி அடுத்து உள்ள எலத்தூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சசி பிரியா, அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து முடித்து உள்ளார். 

கல்லூரியில் படிக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கிரி வாசன் என்ற இளைஞரை, சசி பிரியா காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் சேர்ந்து காதலித்து வந்த நிலையில், ஒன்றாக ஊர் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது, கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், காதலர்கள் இருவரும் அவரவர் வீடுகளில் தங்கி உள்ளனர். 
 
இந்நிலையில், இளம் பெண் சசி பிரியா வீட்டில் திருமண பேச்சு எழுந்து உள்ளது. இதனால், தன் காதலனுக்கு போன் செய்து, “நம் காதல் விசயத்தைப் பற்றி வீட்டில் கூறி, திருமணத்திற்கு சம்மதம் வாங்கு மாறு” சசிபிரியா, தன் காதலன் கிரிவாசனிடம் கூறி இருக்கிறார். இது தொடர்பாக காதலன் கிரி வாசன், வீட்டில் இது தொடர்பாக தன் பெற்றோரிடம் கூறியதாகத் தெரிகிறது.

காதல் விசயத்தைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த கிரி வாசன் பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மகன் கிரி வாசனை கடுமையாகத் திட்டி உள்ளனர்.  

அத்துடன், கிரி வாசன் பெற்றோர், காதலி சசி பிரியா வீட்டிற்கு வந்து கடுமையாக சத்தம் போட்டு சண்டை போட்டு, கடும் மிரட்டல் விட்டுச் சென்று உள்ளனர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காதலி சசி பிரியா, தன் காதலன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த இளம் பெண் சசி பிரியாவிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து, காதலன் கிரி வாசன் மற்றும் அவரது பெற்றோரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனாலும், “திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கை விட்டுக் கலைந்து செல்வேன்” என்று, அந்த இளம் பெண் விடப்பிடியாகக் கூறி உள்ளார்.

இதனையடுத்து, இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், இரு தரப்பிலும் சமரசம் பேச முயன்று வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.