சென்னையில் கடந்த வாரம் பெய்து வந்த மழை சற்று ஓய்ந்துள்ளதால் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து தமிழகத்தின் டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இதனால், சென்னையில் கடந்த 6-ம் தேதி சனிக்கிழமை துவங்கிய மழை இடைவிடாமல் ஞாயிற்றுக்கிழமை வரை கொட்டித் தீர்த்தது. 

a1

இந்த கனமழையால் சென்னை நகரமே மழைநீர் சூழ்ந்து, வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, பின்னர் ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுப் பகுதியாக மாறி, அன்றிரவே காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றது.

இதன்பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

குறிப்பாக சென்னையில் கடந்த வாரம்  பெய்த அதிக  கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக  பாதிக்கப்பட்டது . பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்  அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
  
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சென்னையில் ஆய்வு செய்த போது முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மழைக்காலம் முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

A2

அதன்படி கடந்த ஒரு வாரம் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு 3 வேளையும் மழைக்காலம் முடியும் வரை மக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே இன்று முதல் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது, கடந்த இரு நாட்களாக சென்னையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால், பழைய முறைப்படி  அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறியாத பலர், இன்று காலையே அம்மா உணவகத்திற்கு சென்ற நிலையில், அங்கு காசு கேட்கப்பட்டதும் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு அரசின் உத்தரவை விளக்கியதைத் தொடர்ந்து பணம் கொடுத்து உணவு அருந்தினர்.
ஏற்கனவே அம்மா  உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.