கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

goat

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 28.8.2021 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது,ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த / கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற முப்பத்தி எட்டாயிரம் பெண்களுக்கு எழுபத்தி ஐந்து கோடியே அறுபத்தி மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனித்தா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

இந்நிலையில்,ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் 100% மானியத்தில் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செம்மறி ஆடுகள்,வெள்ளாடுகள் வழங்கும் இந்த திட்டத்திற்காக ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை பெருவதற்கான  தகுதியுடையவர்களாக யார் யார் இருப்பார்கள் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

1. பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். 
3. ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் 
4. பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது  என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.