ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதாத், ஜெர்மனியில் தற்போது பீட்சா விநியோகிக்கும் பணியை செய்து வருவது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் மற்றும் இது வரையில் ஆட்சி அதிகாலத்தில் இருந்த அனைவரும் ஏறக்குறைய அந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த வாலி முகமது அகமது சாய் என்பவர் கூட, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேறு நாட்டிற்குச் சென்று உள்ளார். 

 நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த வாலி முகமது அகமது சாய், அங்குள்ள காபூல் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

“ஒரு ராணுவ தளபதிக்கே இந்த நிலைமையா?” என்று, உலகம் முடிவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் இணையத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, அவரும் மற்றொரு நாட்டிற்குத் தப்பிச் சென்றார்.

அதே போன்று தான், ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சையத் அஹ்மத் சதாத், கடந்த 2018 ஆம் ஆண்டு அதிபர் அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் இடம் பெற்றார். 

பின்னர், அஸ்ரப் கனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, அவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மனி சென்றடைந்த சையத் அகமது சதாத், அங்குள்ள லீப்ஜிக்கில் வசித்து வருகிறார்.

அத்துடன், ஜெர்மனி நாட்டிற்கு குடிபெயர்ந்த சையத் அகமது சதாத், கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்த பிறகு, ஜெர்மன் நிறுவனமான லிவ்ராண்டோவில் உணவு விநியோகம் செய்யும் பணியினை செய்து வருகிறார்.

அதாவது, கடந்த காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் பெரும் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த அவர், இப்போது எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் சைக்கிளில் சென்று பீட்சா டெலிவரி செய்யும் பணியினை செய்து வருகிறார்.

பீட்சா டெலிவரி செய்யும் சையத் அகமது சதாத், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டம்” பெற்றவர் ஆவர்.

மேலும், இவர் தொடக்கத்தில் அரம்கோ மற்றும் சவுதி டெலிகாம் நிறுவனத்திற்காகச் சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தகவல் தொடர்பு துறையில் கடந்த 23 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். 

தனது அனுபவத்தில் அவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில் நுட்ப ஆலோசகராக பணியாற்றி வந்தார். 

அதன் பிறகு, 2016 ஆம் அண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை லண்டனில் உள்ள அரியானா டெலிகாமின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வந்தார். அதன் தொடர்ச்சியாக, 2018 ஆம் ஆண்டு முதல் ஆப்கன் அமைச்சராக அவர் பணியாற்றி இருக்கிறார்.

தற்போது பீட்சா டெலிவரி பாயாக வேலை செய்யும் சையத் அகமது சதாத்தின் இந்த நிலையானது, “அரபு நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்களுக்கு ஒரு பாடம் என்றே” இணையத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.