நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை தாக்கியதில் ஒரே வீட்டைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மயக்க ஊசி செலுத்தி வனத்துறை ஊழியர்கள் பிடித்துச் சென்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து உள்ள கலர்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தற்போது, கோடை காலம் என்பதால், இரவு நேரத்தில் காற்றோட்டம் இல்லாமல் அவர் சிரமப்பட்டு வந்தார். இதனால், நேற்று இரவு தூங்கும் போது, காற்றுக்காக அந்த வீட்டின் உரிமையாளர் வேலாயுதம், தனது வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு, வீட்டின் உள்ளே குடும்பத்துடன் உறங்கிக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில், அந்த ஊரும், வேலாயுதம் குடும்பமும் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று அவரது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று அதிரடியாகப் புகுந்து உள்ளது.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சத்தம் போட்டு உள்ளது. சிறுத்தையின் சத்தம் கேட்டு, வீட்டின் உள் அறையில் இருந்து வெளியே வந்து  வேலாயுதத்தின் மனைவி பிரேமா, அவரது மகன் மனோகரன், மகள் மகாலட்சுமி ஆகியோர் பார்த்து உள்ளனர். அப்போது, அவர்கள் 3 பேரையும் சிறுத்தை மாறி மாறி தாக்கி உள்ளது. இதில், அந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்து அலறி துடித்த அவர்கள் போட்ட சத்தத்தில், அந்த சிறுத்தை வீட்டிற்குள் இங்கும் அங்குமாக ஓடி இருக்கிறது.

இதனால், அலறியடித்துக் கொண்டு அவர்கள் 3 பேரும் அந்த வீட்டின் வெளியே ஓடி வந்து உள்ளனர். ஆனால், அந்த சிறுத்தை வீட்டிற்குள் இருந்து உள்ளது. இதனால், அந்த சிறுத்தையை தங்களது வீட்டிற்குள் வைத்துப் பூட்டிய அவர்கள், காவல் துறையினருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதற்குள் விடிந்து விட்டால், அந்த கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து, அந்த வீட்டைச் சுற்றி நின்று உள்ளனர். 

அத்துடன், சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த 3 பேரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், இது குறித்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், வீட்டிற்குள் இருந்த சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறுத்தையைப் பிடிக்கும் பணி பல மணி நேரமாக நீடித்து வந்த நிலையில், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையைப் பிடித்தனர்.

இதனையடுத்து, மயக்கமடைந்த சிறுத்தையை மீட்ட வனத்துறை அதிகாரிகள், அதனை கயிற்றால் கட்டி தனி வாகனத்தில் கொண்டு சென்றனர். பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்ற விட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 

மேலும், இது போன்று சிறுத்தைகள் இனி ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.