மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில்  3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து சில ஆண்டுகளாக முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இதனை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்தித்துப் பேசினார். 

அந்த சந்திப்பின் போது, “தமிழ்நாட்டின் நலன் காக்கப்பட வேண்டும் என்றும், பெங்களூர் குடிநீர் தேவைக்காக அணை கட்டுப்படுவதாகக் கர்நாடக அரசு கூறுவது ஏற்புடையது அல்ல” என்றும், அவர் திட்டவிட்டதாகக் கூறியதாகத் தகவல்கள் வெளியானது.

“கர்நாடக அரசின் இந்த திட்டத்தினால், தமிழக விவசாயிகளின் நலம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், இதனால் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது” என்றும், பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

அதே போல், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் கடந்த 6 ஆம் தேதி, டெல்லி சென்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து “மேகதாது பிரச்சனை” குறித்து, விரிவாகப் பேசினார். 

அப்போது, “மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார். 

ஆனால், அதற்கு முன்னதாகவே “மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது” என்று, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுப்படுவதாக நீங்கள் கூறுவது சரியான காரணமாக இல்லை என்றும், மேகதாது அணை திட்டம் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவை பாதிக்கும் என்றும், தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரைத் திசை திருப்பும் விதமாக மேகதாது திட்டம் உள்ளது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் தான், மேகதாது பிரச்சனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 13 கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் படி,

- “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- “இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்” என்றும், 2 வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

- “தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், இந்த கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது என்றும், அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்ட பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது” என்றும், 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.