தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதிகளில் கரையை கடந்த பின்பு தற்போது வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வலுவிழந்த நிலையிலேயே நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவிழந்து விடும்.

இந்நிலையில்,  புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, ஆந்திரப் பகுதியிலிருந்து குமரிக்கடல் பகுதி வரையிலும், உள் தமிழகம் வரையிலும் நிலவுகிறது.  இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

d1

நாளை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுபெறக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் பெரம்பலூர், திருச்சி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகமான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 13 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

d2

இன்று குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை கேரளக் கடற்கரைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த அக்டோபர் 1 முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 42 சென்டி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 28 சென்டிமீட்டர். வழக்கமானதை விட இது 56 சதவீதம் அதிகமாகும். சென்னை மாவட்டத்தைப் பொறுத்தளவில் வடகிழக்கு பருவமழை இயல்பு அளவு 44 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் பதிவான அளவு 88 சென்டிமீட்டர். இது இயல்பை விட 85 சதவீதம் அதிகமாகும்.

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரையில் மழையின் இயல்பு அளவு 4 சென்டி மீட்டர் ஆகும். ஆனால் மழை பதிவான அளவு 10 சென்டி மீட்டர் ஆகும். இதன்மூலம் தமிழகத்தில் 142 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருக்கிறது.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தளவில் 7-ம்தேதி முதல் இன்று வரை மழையின் இயல்பு அளவு 8 சென்டி மீட்டர் ஆகும். ஆனால் மழை பதிவான அளவு 46 சென்டி மீட்டர் ஆகும். இதன்மூலம் சென்னையில் 491 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருக்கிறது. சென்னையில் கிட்டதட்ட ஐந்தரை மடங்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.