கலை, அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள், முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளைப் பின்பற்றியே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. 

இந்த விவகாரம் குறித்து ஏஐசிடிஇ தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரியர் தேர்வு ரத்து செய்வது தவறான முடிவு. இதுதொடர்பாக சூரப்பாவுக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தேன்.  ஆனால், என்னிடம் இருந்து தமிழக அரசுக்கோ அல்லது தமிழக அரசிடம் இருந்து எனக்கோ தேர்வு நடத்துவது தொடர்பாக எந்தக் கடிதத் தொடர்பும் இல்லை. அரியர் தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கின் விசாரணையின் போது தனது நிலைப்பாட்டை ஏஐசிடிஇ தெரிவிக்கும்' எனத் தெரிவித்தார்.  அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இறுதி பருவத் தேர்வில் அரியர் வைத்த மாணவர்களுக்கான தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளது.

அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அண்ணா பல்கலை துணைவேந்தருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் தேர்வு நடத்தாமல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இறுதி செமஸ்டரில் அரியர் வைத்தவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., ஆகிய துறையில் அரியர் வைத்தவர்களுக்கு, செய்முறை தேர்வுகள் வரும் 22ஆம் தேதி, எழுத்துத் தேர்வுகள் 24ஆம் தேதி முதலும் நடைபெறும். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

எந்தெந்த பாடங்களுக்கு எந்தெந்த தேதிகளில் தேர்வு நடைபெறும் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.