கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பதில் மனுதாக்கல் செய்துள்ளது
கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை பல்கலை வரம்பிற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்நிலையில் அரியர் தேர்வு தொடர்பான, தமிழக அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

முன்னதாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கும் முரணானது. இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது. செப்டம்பர் 30க்குள் இறுதி பருவத் தேர்வு நடத்தாவிட்டால்  கால அவகாசத்தை  நீட்டிக்க  கோரலாம். இறுதி பருவ தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.