கேரளாவில் முதல் கணவரைப் பிரிந்து 2 வது திருமணம் செய்த 3 வது மாதத்திலேயே வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான பெண், 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த அகிலா பரயில் என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கணவருடன், அகிலாவுக்கு தொடர்ந்து மன கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதன் காரணமாக, தன் கணவரை வெறுத்து வந்த அகிலா, கடந்த 2016 ஆம் ஆண்டு, முறைப்படி கணவரை விவகாரத்து செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை அகிலா 2 வதாக திருமணம் செய்தார். அவருடன் திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து அகிலா, 2 வது திருமணம் ஆன 3 வது மாதத்திலேயே, வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணம், 40 சவரன் நகைகள் உள்ளிட்டவற்றுடன் காரையும் எடுத்துக்கொண்டு கணவருக்குத் தெரியாமல் அகிலா மாயமானார்.

இதனையடுத்து, அகிலாவை அவரது கணவர் பல இடங்கிலில் தேடி பார்த்தும், அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கு அப்படியே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அகிலா, தற்போது மீண்டும் கேரளா திரும்பி உள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பிய அகிலா, தனது உறவினர்களை மீண்டும் சந்தித்து பேசி வந்துள்ளார். அத்துடன், உறவினர் 
வீடுகளில் அவர் தங்காமல், அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்துத் தங்கி உள்ளார். 

இப்படிப்பட்ட சூழலில், ஹோட்டல் அறையில் திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ரூமில் அகிலா சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து, அங்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அகிலா உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன் வராத நிலையில், போலீசார் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 4 ஆண்டில் காசர்கோடு, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட பல இடங்களுக்கு அகிலா சென்று வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் யாருடன் எல்லாம் பழகி வந்தார், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.