கர்ப்பிணி மகள் மீது தந்தை ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த தீபிகா, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான சாய்குமார் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

father throws acid on daughter in Tiruvallur

இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்த நிலையில், இவர்களது காதல் விவகாரம், தீபிகாவின் அப்பாவுக்கு தெரியவந்துள்ளது. 

தீபாகாவின் அப்பா பாலகுமார், ஓய்வு பெற்ற காவலர் ஆவார். மகளின் காதல் விவகாரத்தில் கடும் கோபம் அடைந்த அவர், வீட்டை காலி செய்து, திருத்தணிக்கு குடியேறி, அங்குள்ள கல்லூரியில் தன் மகளை சேர்த்தார். 

மேலும், திருத்தணியில் மகளை கடுமையாகச் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, வீட்டை விட்டு வெளியேறி, பெங்களூரு சென்று, சாய்குமாரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், திருவள்ளூவரில் இருக்கும் சாய்குமார், தன் வீட்டிற்குத் திரும்பி உள்ளார். அங்கு, கர்ப்பிணியான மருமகளை சாய்குமாரின் பெற்றோர்கள் நன்றாகக் கவனித்து வந்தார்கள்.

இதனிடையே, மகள் திருவள்ளூர் வந்திருப்பதை அறிந்த அவரது தந்தை பாலகுமார், 4 ரவுடிகளுடன் மகளை தேடி வந்துள்ளார். அப்போது, “உனது தயாருக்கு உடம்பு சரியில்லை. நீ நேரில் வந்து பார்த்தால், அவர் குணமாகிவிடுவார்” என்று கூறியுள்ளார். ஆனால், தந்தையுடன் வந்த 4 ரவுடிகளைப் பார்த்த தீபிகா சந்தேகப்பட்டு, தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால், கடும் கோபமடைந்த பாலகுமார், தான் கொண்டு வந்த அமிலத்தை மகள் கர்ப்பிணி என்றும் பார்க்காமல், அவர் முகத்தில் வீசி உள்ளார். இதில், அவர் வலியால் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

father throws acid on daughter in Tiruvallur

இதனையடுத்து, தீபிகாவின் அத்தை மற்றும் அவர் வீட்டில் உள்ள இன்னொரு மருமகள் வந்து பாலகுமாரை தடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் மீதும் அந்த அமிலத்தை வீசி விட்டு, மயக்கமடைந்த மகளை, தன்னுடைய காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இந்த தகவல் கணவர் சாய்குமாருக்கு சொல்லப்பட்ட நிலையில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சாய்குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலகுமாரை தேடி வந்தனர்.

போலீசார் தன்னை தேடுவதை உணர்ந்த பாலகுமார், மயக்கமடைந்த மகளை, பாதி வழியில் ரோட்டிலேயே இறக்கி விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், தீபிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கர்ப்பிணி மகள் மீது, தந்தையே ஆசிட் வீசிய சம்பவம், திருவள்ளூரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.