பெற்ற மகளை 2 ஆண்டுகளாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள், இந்த முறை தமிழ்நாட்டில் அதுவும் சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் அரங்கேறி இருக்கிறது.

சென்னை சோழிங்கநல்லூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த 14 வயதான சிறுமி, சோழிங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படியான, சூழ்நிலையில் தான், அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் தனது மகளை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அப்போது, அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரித்து உள்ளார். ஆனால், அவர் அழுதுகொண்டே இருந்தாரே தவிர, வேற ஒன்றும் சொல்ல வில்லை. இதனையடுத்து, கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விரைந்து வந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “எனது கர்ப்பத்திற்கு என் தந்தை வர்க்கீஸ் தான் காரணம்” என்று, சிறுமி அழுதுகொண்டே கூறி உள்ளார். சிறுமியின் தந்தை வர்க்கீஸ்கு தற்பேர்து 54 வயது ஆகிறது. 

அத்துடன், “கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் நான் தனியாக இருக்கும் போது, என்னை மிரட்டி மிரட்டி என் தந்தை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், இதனை வெளியே சொன்னால், என்னை கொலை செய்து விடுவேன்” என்று, அவர் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார் என்றும், சிறுமி கூறி உள்ளார்.

இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தை வர்கீஸை போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, பெற்ற மகளைத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.