பிற நாள்களை விடவும், கொரோனா நேரத்தில் ஆன்லைன் உபயோகம் மக்கள் மத்தியில் பரவலாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போலி கணக்குகள் மற்றும் பிரபலங்களின் கணக்கு முடக்கம் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளது.

இப்படி ஒரு குற்றமாக, சென்னை மாதவரம் காவல் உதவி ஆணையா் அருள் சந்தோஷ்முத்து, வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையா் ஜூலியஸ் சீசா், மத்திய குற்றப்பிரிவு முன்னாள் காவல் உதவி ஆணையா் ராஜேந்திரகுமாா் உள்பட காவல் உயரதிகாரிகள் பெயரில், முகநூலில் போலி கணக்குத் தொடங்கி, மோசடி நடைபெற்றிருப்பது அண்மையில் தெரியவந்தது.

இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் பெயரில் போலி முகநூல் கணக்குத் தொடங்கியிருப்பது, ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. மகேஷ் அதுல் அகா்வால் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த கணக்கில், மகேஷ்குமாா், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படமும், அவா் சீருடையில் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்த தகவலறிந்து அதிா்ச்சியடைந்த காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய நபா்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதே போல், கூடுதல் காவல் ஆணையா் (தெற்கு) ஆா்.தினகரன் பெயரிலும் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, இந்த 2 கணக்குகளையும் சைபா் குற்றப்பிரிவினா் முடக்கினா்.

காவல் உயரதிகாரிகள் பெயரில் உருவாக்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம் என்றும், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே அதைத் தொடா்பு கொள்ளுமாறும், சைபா் குற்றப்பிரிவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

நாடுமுழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்தான் இப்படியொரு சம்பவம் வெளிவச்சத்துக்கு வந்தது. சென்னையில் நீட் தேர்வு நடைபெற்ற மையங்களில் ஒன்றான கோட்டூர்புரம், ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்றுகாவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

``காவல் துறை அதிகாரிகளின் பெயர்களில் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் போலியான கணக்குகளை தொடங்கி,அதன்மூலம் மோசடி நடத்தமுயன்ற சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம்தொடர்பாக போலி கணக்குகளை தொடங்கிய கும்பலின் 2 செல்போன் எண்கள்மற்றும் அவர்கள் கொடுத்தவங்கிக் கணக்கு விவரங்களைவைத்து துப்புத் துலக்கப்பட்டுவருகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் கவனமுடன் அதை கையாள வேண்டும்"

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஷாங் சாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.