போலி அசிஸ்டன்ட் கமிஷனரை சுங்கச்சாவடியில் வைத்து நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அடுத்து உள்ள பட்டிவீரன் பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட “வத்தலக்குண்டு -    திண்டுக்கல் தேசிய   நெடுஞ்சாலையில், தேனியிலிருந்து TN 37 G-0515 என்ற வாகனம் வந்தால், உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று, திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் அலுவலகத்திலிருந்து அதிரடியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நேற்று அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு இரவு நேரத்தில் அந்த குறிப்பிட்ட வாகனம் சைரன் விளக்கு பொறுத்துப்பட்டு, சுங்கச்சாவடியை கடக்க முயன்றது.

  அந்த வாகனத்தில், “காவல்” என எழுதப்பட்டு, காவல் துறையின் உயரதிகாரி வாகனம் போல் வந்து நின்றது. அப்போது, அந்த வாகனத்தை மேலும் அங்கிருந்து செல்ல முடியாமல் வழி மறித்து நின்ற நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், அந்த வாகனத்தில் இருந்த காவல் அதிகாரியிடம் விசாரித்து உள்ளனர்.

  அப்போது, அந்த வாகனத்தில் இருந்து 41 வயதான விஜயன் என்பவர் கீழே இறங்கி உள்ளார்.

   இறங்கியதும், போலீசாரின் பாணியிலேயே, “நான் அசிஸ்டன்ட் கமிஷனர் என்றும், க்ரைம் ட்யூட்டிக்கு வந்திருப்பதாகவும்” கூறியிருக்கிறார். 

   இதனால், அவருடைய அடையாள அட்டையைக் காட்டும் படி, போலீசார் கேட்டு உள்ளனர். ஆனால், அதற்கு அவர் “அடையாள அட்டை இப்போது என்னிடம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

   அதே நேரத்தில், அவரிடம் துப்பாக்கி இருந்துள்ளது. அந்த துப்பாக்கி பற்றியும் கேட்டிருக்கிறார்கள். இதனால், சரியாகப் பதில் சொல்லத் தெரியாத அந்த நபர், தனது துப்பாக்கியை அந்த பகுதியில் தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. 

   இதனால், இவர் போலி அசிஸ்டன்ட் கமிஷனர் என்ற முடிவுக்கு வந்த போலீசார், அவரை உடனடியாக கைது செய்தனர்.

   பின்னர், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர்.

   அத்துடன், அவர் பயன்படுத்திய காரையும், அடையாள அட்டையையும், அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

   இதனையடுத்து, மாவட்ட அளவிலான காவல் உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டதில் சென்னை கொளத்தூர் தென்பழனிநகர், ஜீவா தெரு சுகாசினி அடுக்குமாடிக்குடியிருப்பில் வசித்துவரும் சின்னப்பையன் மகன் விஜயன் தான், இவர் என்பது தெரிய வந்தது. 

   மேலும், இவர் போலியாக பயன்படுத்தி வந்த புதிய போலீஸ் ஜீப், கோவை செக்கானபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமீனாட்சி என்பவரது ஜீப் என்பதும் தெரிய வந்தது.

   குறிப்பாக, போலியாகக் காவல் அதிகாரிகளின் அடையாள அட்டை போன்று தானே போலியாக ஒரு அடையாள அட்டையை, விஜயன் தயாரித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. 

   முக்கியமாக, அவர் போலியான துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

   இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் படி, “எத்தனை நாட்களாகப்  போலீசாக வலம் வந்தார் என்றும், இவரால் பொது மக்கள் யாரேனும் ஏமார்ந்திருக்கிறார்களா?” என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.