கள்ளக் காதலி வேறொரு நபருடன் பேசிவந்ததால், ஆத்திரம் அடைந்த கள்ளக் காதலன், அந்த இளம் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் 22 வயதான எழில் செல்வி என்ற இளம் பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரைக் காதலித்து வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இவர்களுக்குள் திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், இளம் பெண் எழில் செல்விக்கு உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள ஒலையனூர் கிராமத்தைச் 
சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், இளம் பெண் எழில் செல்வி, தனது கணவனைக் கைவிட்டு தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பிறகு, தனது கள்ளக் 
காதலன் அய்யப்பன் உடன், உளுந்தூர்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, எழில் செல்வி திருட்டுத் தனமாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இப்படியா நிலையில், கள்ளக் காதலி எழில் செல்வியின் நடவடிக்கைகளில் கள்ளக் காதலன் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது ரகசிய காதலியுடன் அவனுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, “தனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒருவருடன் செல்போனில் எழில் செல்வி பேசி வந்தார்” என்றும், இது தெரிந்து கடும் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் அவருடன் கடும் சண்டை போட்டு வந்திருக்கிறார்.

இப்படியான சண்டை வழக்கம் போல், நேற்றும் நடந்து உள்ளது. அப்போது, கடும் ஆத்திரம் அடைந்த காதலன் அய்யப்பன், ரகசிய காதலி எழில் செல்வியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் மயங்கி விழுந்த அந்த இளம் பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆனால், இது தெரியாமல் எழில் செல்வி பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்துப் பதறிப்போன கள்ளக் காதலன் அய்யப்பன், தனது உறவினர்கள் சிலரின் உதவியுடன் எழில் செல்வியை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். 
 
அங்கு, மருத்துவர்களிடம், “எனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக” கூறி இருக்கிறார். அப்போது, எழில் செல்வியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், “அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக” கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனைக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அய்யப்பனிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “எழில் செல்வியை கொலை செய்ததை” அவர் ஒப்புக் கொண்டார். 

அதற்கு காரணம், “எழில் செல்வி வேறு ஒருவருடன் பேசிவந்தால் ஆத்திரம் அடைந்தேன் என்றும், எழில் செல்வியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், எனக்கு துரோகம் செய்துவிட்டு, வேறு ஒருவருடன் செல்போனில் பேசி வந்தது எனக்கு தெரியவந்ததால் ஆத்திரத்தில் நான் எழில் செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்” என்பதையும், அய்யப்பன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனையடுத்து, அய்யப்பனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.