சிறைக்குச் சென்றால் 3 வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த 41 வயதான சந்தோஷ் என்பவர், ஒன்றுக்கு இரண்டு திருமணங்கள் செய்து பெயருக்கு ஏற்றார்போல் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தனது 2 மனைவிகளையும் பிரிந்து அவர், நீண்ட நாட்களாகத் தனிமையில் தவித்து வந்துள்ளார்.

bomb hoax

இதனையடுத்து, சாப்பாட்டிற்காக அங்குள்ள சிறுமுகை அருகில் உள்ள மில் ஒன்றிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு, அதிக வேலைச் சுமை காரணமாக, அந்த வேலையை வெறுத்து, வாழ்க்கையையும் வெறுத்துக் காணப்பட்டுள்ளார். அதனால், வேலைக்குச் செல்வதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டார். ஆனால், பசி அவரை வாட்டியது. வாழக்கையில் எல்லாவற்றையும் இழந்தவனாய் சாப்பாட்டிற்கு யோசித்த அவர், வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதன்படி, கடந்த 3 ஆம் தேதி சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த அவர், ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில்  வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், வெடிகுண்டு வைப்பதற்காகத் தன்னை ஜம்மு காஷ்மீரிலிருந்து சிலர் அனுப்பி வைத்ததாகவும் கூறி, போலீசாரை அதிர வைத்துள்ளார்.

இதனையடுத்து, மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில், அது பொய்யான தகவல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி எண்ணை ஆய்வு செய்தனர். அந்த நம்பர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவரைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், போதையில் அவர் சொல்போனை தொலைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், தீவிரமாக மேற்கொண்ட விசாரணையில், ஈரோடு ரயில் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த சந்தோஷ் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். 

bomb hoax

விசாரணையில், போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிறைக்குச் சென்றால் 3 வேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகத் தான், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், சந்தோஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். 3 வேளை சாப்பாட்டிற்காக, ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.