தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதற்கு பின்பு, தமிழக முதல்வர் பழனிசாமி ஆறாவது முறையாக, ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதேவேளையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் தலைமையில் நடக்கும் யுத்தம் பற்றி தமிழக ஆளுநரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். தங்களது மாநில அரசு நிர்வாகம், அரசியல் பற்றி மத்திய அரசுக்கு பொதுவாகவே ஆளுநர்கள் அறிக்கைகள் அனுப்புவது வழக்கம்.

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு நிலவரம், கொரோனா தடுப்புப் பணிகள் பற்றிய நிலவரம் பற்றி விளக்குவதற்காக மாதத்துக்கு ஒருமுறையாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார். இந்த வகையில் இன்று (அக்டோபர் 5) தமிழக ஆளுநரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின் போது முதல்வருடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் செல்வதாகவும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள், கட்டுப்பாடுகள் பற்றிய அறிக்கையை ஆளுநரிடம் தமிழக முதல்வர் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

அதேநேரம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்ட காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டபோது அவர்களுக்கு இடையே சமூக இடைவெளி தாண்டிய ஓர் அரசியல் இடைவெளி, நிர்வாக இடைவெளி இருப்பதை உணர்ந்திருக்கிறார் ஆளுநர்.

ஏற்கனவே துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டம், மருத்துவ நிபுணர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தபோது தலைமைச் செயலகத்திலேயே இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் அந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இவ்வாறு கட்சியின் இரட்டைத் தலைமை குறித்த சலசலப்புகள் ஆட்சியிலும் எதிரொலிக்கின்றன என்று ஆளுநர் மாளிகைக்குத் தகவல்கள் சென்றிருக்கின்றன.

இதையடுத்துதான் முதல்வரை ஆளுநர் அழைத்திருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மட்டுமல்ல, அதிமுக என்ற கட்சி தாண்டி ஆட்சியிலும் எதிரொலிக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் குறித்தும் முதல்வரிடம் ஆளுநர் விசாரிப்பார் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.