தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் 1,63,154 இடங்கள் அரசுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.   தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றனர்.

இதில் அக்டோபர் 1 முதல் 7 வரை விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.  இதில் மொத்தம் 7,435 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.  இதில் 497 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இன்று முதல் பொதுப்பிரிவு அற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாகத் தொழில் நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.   இதில் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 கட்டங்களாக வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஏற்கெனவே கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று கடந்த மாதம் யுஜிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்காகக் கலந்தாய்வில் பங்கேற்க 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். இந்த சூழலில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டில் 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளி பிரிவில் 6,785 இடங்களில் 98 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

நிரப்பப்படாத இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும்.

இந்நிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
 
மொத்தம் நான்கு கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. முன்னதாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், முதல்கட்டமாக, 1 -12,263 தரவரிசையில், கட்ஆஃப் மதிப்பெண் 199.667 முதல் 175 வரை பெற்ற மாணவர்களுக்கு, இன்று முதல் 16ஆம் தேதி வரையிலும்,

இரண்டாம் கட்டமாக, 12,264 - 35,167 தரவரிசையில், கட் ஆஃப் மதிப்பெண் 174.75 முதல் 145.5 வரை பெற்ற மாணவர்களுக்கு 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலும்,

மூன்றாம் கட்டமாக, 35,168 - 70,300 தரவரிசையில், கட் ஆஃப் மதிப்பெண் 145 முதல் 111.75 வரை பெற்ற மாணவர்களுக்கு 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும்,

நான்காம் கட்டமாக 70,301-1,10,873 தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 111.5 முதல் 77.5 வரை பெற்ற மாணவர்களுக்கு 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள், ரேங்க் லிஸ்ட் உள்ளிட்ட விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.