பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “மாணவிகள் ஏன் மோதிக்கொண்டனர்?” என்பதற்கான காரணத்தையும் விசாரணையில் அதிகாரிகள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

மதுரையில் தான் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த 30 ஆம் தேதி சனிக் கிழமை அன்று, ஈ.வெ.ரா நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் மற்றும் மாப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த இரு வேறு அரசுப் பள்ளி மாணவிகளும், இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டு, கடும் மோதல் போக்கில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், இது குறித்து இரு பள்ளி மாணவிகளிடம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விசாரணை நடத்திய நிலையில், இன்றைய தினம் அந்த பகுதியின் மாநகராட்சி கல்வி அதிகாரி ஆதி ராமசுப்பு தலைமையிலான குழு, விசாரணை மேற்கொண்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “கடந்த வெள்ளிக் கிழமை அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இரு பள்ளி மாணவிகளும் பெரியார் பேருந்து நிலையம் சென்று உள்ளனர். 

அப்போது, சில பள்ளி மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடிய போது, இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக, அப்போது அந்த இரு பள்ளியைச் சேர்ந்த மாணவிகளுக்கு இடையே கைகலப்பாக மாறி, பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி, மோதிக்கொண்டனர் என்பதும்” தெரிய வந்தது.

அத்துடன், இந்த மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தற்போது கூறி உள்ளனர்.

அதன் படி, “வரும் 5 தேதி தேர்வு தொடங்க உள்ள நிலையில், அது வரை பள்ளிக்கு வர வேண்டாம்” என்று, மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு அறிவுறுத்தி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், “தேர்வின் போது மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர், மாணவிகளை அழைத்து வந்து தேர்வு முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்றும், கல்வித் துறை அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். 

முக்கியமாக, “இனி மேல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்,  மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இச்சம்பவம், மதுரை மட்டுமில்லாது, தமிழகம் முழுவதும் உள்ள சக அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.