“கொடநாடு விவகாரம் பற்றி எடப்பாடி பழனிச்சாமி மைக் பிடித்து பேசிய போது அவரது கை நடுங்கியது, ஆட்டம் கண்டது, இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்” என்று, அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசி உள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தையே அதிர வைத்த கொடநாடு கொலை வழக்கு விவகாரம், தற்போது தமிழக அரசியலில் புதிய சூட்டை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, சட்டசபையில் முதலில் திமுகவும், அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

இதனால், கடந்த வாரம் அதிமுக எம்.எல்.ஏ. க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.

பின்னர், தமிழக சட்டசபையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விகாரத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, தற்போது புதிய குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.

அதன் படி, “ 'கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது' என்று, ஆ.ராசா முன்னரே கூறினார் என்றும், அது போலவே கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் அளித்த வாக்குமூலத்தில் 'எடப்பாடி பழனிச்சாமியின் சொன்னதின் பேரில் தான் சம்பவம் நடந்ததாக' தெரிவித்திருந்தார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

“ஆனால், இப்போது அது குறித்து யாரும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தெரிவிக்க வில்லை என்றும், அப்படி இருக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமியே தானாக முன் வந்து ஏன் பதற்றம் அடைய வேண்டும்? ஏன் பதற வேண்டும்” என்றும், புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “கொடநாடு வழக்கு சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் யாரேனும் எடப்பாடி பழனிச்சாமியை விசாரணைக்கு அழைத்தார்களா?”

“ எடப்பாடி பழனிச்சாமியை நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்தார்களா?”

“அப்புறம் ஏன் எடப்பாடி பழனிச்சாமியை பதற்றம் அடைய வேண்டும்?”

குறிப்பாக, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக சட்டப் பேரவையில் சபாநாயகரின் அனுமதி பெறாமலேயே, கொடநாடு விவகாரத்தினை எழுப்பியது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், அவர் மைக் பிடித்து பேசிய போது அவரது கை நடுங்கியது, ஆட்டம் கண்டது, இதை எல்லோரும் கவனிக்க வேண்டும்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனினும், “ இந்த கொலை வழக்கில், உண்மை என்ன என்பதை இந்த அரசும், காவல் துறையும் வெளியே கொண்டு வந்து விடும் என்றும்,  அன்றைக்கு நிச்சயமாக மக்களும் இது பற்றிய உண்மை தெரிய வரும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “கொடநாடு பங்களாவின் பாதுகாப்பு விசயத்தில், ஏன் அந்த பங்களாவில் இருந்து போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றீர்கள்? என்றும், ஒரு போலீஸ் கூட அந்த பங்களாவில் பாதுகாப்புக்கு இல்லாமல் போனது ஏன்? என்பதற்கும், எடப்பாடி பழனிச்சாமி தான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும், புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.

“கொடநாடு பங்களாவில், போலீஸ் பாதுகாப்பு வாபஸ் வாங்கப்பட்டதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றியெல்லாம் எடப்பாடியின் மனசாட்சிக்குத் தான் தெரியும்” என்றும், புகழேந்தி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.

மிக முக்கியமாக, “எதையும் தைரியமாக பேசும் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விசயத்தில் எல்லோரையும் அழைத்து உட்கார வைத்து கண்டனம் தெரிவித்தது ஏன் என்றும். அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் ஆவேசமாக கத்தும் போது ஓபிஎஸ் மட்டும் சிரிச்சிக்கிட்டு இருந்தது ஏன்?” என்றும், புகழேந்தி பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி உள்ளார்.