சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவை குறைப்பதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில்  ஏற்கெனவே 74 இடங்களில் ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 10 இடங்களில் இ-பைக் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 32 ஸ்மார்ட் பைக்குகள், 32 அடுத்த தலைமுறை சைக்கிள்கள் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கியுள்ளார். 


இதன் முதற்கட்டமாக மயிலாப்பூர், மெரினா கடற்கரை, நந்தனம், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம் , பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் பைக் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மொபைல் ஆப்   ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 45கி.மீ வரை செல்லலாம். QR குறியீடுகளைப் பயன்படுத்தி பைக்கை இயக்கிக்கொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட்  பைக்கானது பேட்டரியால் இயங்கக்கூடியது. முதல் 10 நிமிடங்களுக்கு 10 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.1 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அடுத்த தலைமுறை சைக்கிள்களை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.5.50 மற்றும் அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ரூ.9.90 என கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பின் அடிப்படையில், இத்திட்டம் மேலும் விரிவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.