கொரோனா வைரஸ் எதிரொலியாக அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அறிவித்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

சீனாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தொடர்ந்து உலக மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

 Donald Trump emergency in US coronavirus

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 49 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். சுமார் 2 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்க்கும் வகையில், 18 அமெரிக்க மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாத வகையில், தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டன. ஆனாலும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், மால்கள், விளையாட்டுப் போட்டிகள் என மக்கள் கூடும் அனைத்து விசயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

இதனால், வேறு வழியில்லாமல்.. அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

 Donald Trump emergency in US coronavirus

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், “கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக, அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாக” அறிவித்தார். 

அத்துடன், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்வதாகவும், இது மாகாண அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்” எனவும் தெரிவித்தார். 

“அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும், கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவவும்” உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

“இந்த அவசர சிகிச்சை மையங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில், பொதுமக்களுக்குச் சிகிச்சை அளிக்கும்” என்றும் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.